சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது திருப்பூரில் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கபட உள்ளதாகவும், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிலத்தில் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் கட்டப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டசபையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை & வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் கிராமப்புற கடன் மற்றும் திட்டமிடல் மற்றும் மேம்பாடு துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகினற்ன. இன்றைய அமர்வின் கேள்வி நேரத்தின்போது,  சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் தெரிவித்தனர்.

பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி,  “பூந்தமல்லி தொகுதியில் உள்ள காசநோய் மருத்துவமனையில் இரு மருத்துவர்களே உள்ளனர். செவிலியர்கள் இல்லை. புதிய கட்டடம் வேண்டும். மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்த மருத்துவத்துறை அமைச்சர்  மாசுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் காசநோய் தொடர்பாக 7,55,660 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டு 21,768 பேர் புதிய காச நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.  இந்தியாவிலேயே காசநோய் கண்டறிவதில் முதலிடத்தில் தமிழ்நாடு இருப்பதால் ஒன்றிய அரசிடம் கடந்த வாரம் விருது பெற்றது என்றவர்,  உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்.

மேலும், லால்குடி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்கள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் அக்கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், தனது கிருஷ்ணகிரி தொகுதியில் புதிதாக பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறிய அமைச்சர் நேரு,  புதிய பூங்கா அமைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. புதிய பூங்காக்களை அமைக்கத் தேவையான நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே இடம் இருந்தால் புதிய பூங்கா அமைக்க இந்த ஆண்டே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ஈரோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார்,  திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய அமைச்சர் சாமிநாதன்,    சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிலத்தில் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் கட்டப்பட உள்ளது என தெரிவித்தார்.

கோடை காலத்தில் மின்சார பிரச்சினையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய  அமைச்சர் செந்தில் பாலாஜி,  சென்னையில் மின்சாரத் துறை சார்பில் நடைபெற்று வரும் பணியில், விரைவில் குறித்த காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்றார்.

கண்டிகை தாங்கல் குளம் பசுமை பூங்கா எப்போது பயன்பாட்டு வரும் என உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் நேரு, கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் -கூடுவாஞ்சேரி தொகுதியில் அமைந்துள்ள கண்டிகை தாங்கல் குளத்தை சுற்றி பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனற்ர்.

குமரி மாவட்டத்தில் ஒருவழிச்சாலையாக உள்ள சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு பதில் கூறிய அமைச்சர்  எ.வ.வேலு : கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை முதல் கருங்கல் வரையுள்ள  5.5 கி.மீட்டர்  தூர சாலையை இருவழிச் சாலையாக  மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,  இந்த நிதியாண்டிலேயே விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.

செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி, “செங்கல்பட்டு தொகுதி நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி 9 வது வார்டு முத்துமாரியம்மன் கோவில் தெருவில் பூங்கா அமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, “செங்கல்பட்டு தொகுதி நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி பேரூராட்சி பகுதியில் வனப் பிரிவு ஏதும் உருவாக்கப்படாததால் விளையாட்டு திடல் பூங்கா ஏதும் இல்லை. முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் 500 மீட்டர் தொலைவில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்” என்றார்.

சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், “ஓனாம்பாளையத்தில் உள்ள மயானத்தில் மாநகராட்சியினர் குப்பைகளை கொட்டுவதால் பிரதேங்களை புதைக்க முடியவில்லை. மயானத்தை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே என் நேரு, “ஏற்கனவே இந்த பிரச்சனை தொடர்பாக பேசியுள்ளார். அதிகாரிகள் உடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், “கிருஷ்ணகிரி தொகுதி கா

வேரிபட்டினம் பேரூராட்சியில் நடைபாதையுடன் பூங்காங்கள் அமைக்கப்படுமா? அல்லது பழைய பூங்கா சீர் செய்யப்படுமா?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, “புதிய பூங்காங்கள் உருவாக்குவதில் எந்த சிரமமும் இல்லை. நிச்சயமாக புதிய பூங்காக்கள் உருவாக்கலாம். பேரூராட்சியாக இருந்தாலும், நகராட்சியாக இருந்தாலும் பூங்காங்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் நிதி கொடுத்துள்ளார். இடம் இருக்குமானால் இந்த ஆண்டு செயல்படுத்தப்படலாம். ஏற்கனவே பழுது அடைந்துள்ள பூங்காவையும் சரி செய்யலாம்” என்றார்.

சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், “நம்பியூர் பேரூராட்சிக்கு கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டிய சூழல் உள்ளது. பாவனி ஆற்றங்கரையை சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளன. 70 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். கூடுதலாக தண்ணீர் வழங்க அரசு முன்வருமா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, “தண்ணீர் எங்கிருந்து வருகிறது என Source சொன்னால் நன்றாக இருக்கும்” என்றார். இதனால் சட்டப் பேரவையில் சிரிப்பலை எழுந்தது