சென்னை: சமூக போராளி அயோத்தி தாசருக்கு சென்னையில்  மணிமண்டபம் கட்டப்படும் என  முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய தொடரில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அயோத்தி தாசப் பண்டிதரின் 175-ஆவது ஆண்டு விழாவையொட்டி வடசென்னையில்  அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். மேலும், தமிழர், திராவிடம் ஆகிய வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழிபுலவர் அயோத்தி தாசப் பண்டிதர் என முதல்வர் சூட்டியதுடன், தமிழக அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொற்களின்றி நடத்த முடியாது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவின் முதல் ஜாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் அயோத்தி தாசர். அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு  விடுதலை சிறுத்தைகள், பாமக, வேல்முருகனின் வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வரவேற்றுள்ளனர்.

மேலும் அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம் வட சென்னையில் எந்த இடத்தில் அமைக்கப்படும், எத்தனை கோடி செலவில் கட்டப்படும் என்று வரும் நாட்களில் தமிழக அரசால் அரசாணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.