டில்லி

மேற்கு வங்க முதல்வர் மம்தாவை தீவிரவாதியுடன் ஒப்பிட்ட  உ பி முதல்வர் யோகி மீது வழக்கு தொடருமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சாலை பேரணியில் நடந்த வன்முறை காரணமாக தேர்தல் ஆணையம் அம்மாநிலத்தில் தேர்தல் பிர்சாரத்தை இன்றுடன் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.   இது குறித்து மம்தா கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது டிவிட்டரில், “பாஜகவை கண்டு அச்சமடைந்துள்ள மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் நடக்கும் பேரணிகளை ரத்து செய்கிறார்.  மேடைகளை அடித்து நொறுக்குகிறார்.  தொழிலாளர்களை தாக்குகிறார்.  ஐஎஸ் தலைவர் பாக்தாதியைப் போல் இவர் பாக்தீதி ஆகி வருகிறார்” என பதிந்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் தனது டிவிட்டரில், “அன்புள்ள மம்தா, உபி முதல்வ்ர் யோகி ஐஎஸ் தீவிரவதி அபு பகர் அல் பாக்தாதியுடன் ஒப்பிட்டு உங்களை பாக்தீதி என அழைத்துள்ளார்.   நான் உங்களை இதற்காக மான நஷ்ட வழக்கு ஒன்றை யோகி மீது தொடரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.   அவருக்கு அதுவே சரியான பதிலாகும்.   இந்த குண்டர்கள் எல்லை மீறுகின்றனர்” என பதிந்துள்ளார்.