கொல்கத்தா:

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவும் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பரபரப்பும் பதற்றமும் நீடித்து வருகிறது.

மோடியின் பேச்சை கேட்க மாட்டேன் என்றும், காலாவதியான பிரதமர் என்றும்  முதல்வர் மம்தா மோடி மீது கடுமையாக சா, திமிர்பிடித்த மம்தா பானர்ஜி தமது தொலைபேசி அழைப்புகளைகூட ஏற்க மறுக்கிறார் என்று பிரதமர் மோடியும் பதிலுக்கு விமர்சித்தது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் கனவில் திளைத்து வரும் மம்தா, தேசிய கட்சிகளுக்கு எதிராக தனது கடுமையான விமர்சனத்தை முன்னெடுத்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் ஆவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரம்  மற்றும் திரிணாமுல் மூத்த தலைவர் பாஜகவில் இணைந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய மம்தா மோடிக்கு எதிராக வங்கதேச புலியாக மாறி உறுமி வருகிறார்.

சாரதா சிட்பண்ட் விவகாரத்தை கையில் எடுத்துள்ள பாஜக, அதன்மூலம் மம்தாவின் அரசியலுக்கு முடிவுகட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் பாஜகவை மலர வைக்க  சாம பே தண்டம் என அனைத்து விதமான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இதன் எதிரொலி, நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் அனல்பறந்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் நீடித்து வந்த நிலையில், தற்போது வன்முறையாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தேர்தல் ஆணையம் 7 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவை அறிவித்த நிலையில், 42 தொகுதி களை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் பல கட்டங்களாக வாக்குப்பபதிவு நடைபெறும் என அறிவித்தது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற  ஏப்ரல் மாதம் 11ந்தேதி 2 தொகுதி களிலும், 2வது கட்ட வாக்குப்பதிவான  ஏப்ரல் 18ந்தேதி – 3 தொகுதிகளிலும், 3வது கட்ட வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 23ந்தேதி 5 தொகுதிகளிலும், 4வது கட்ட வாக்குப்பதிவான ஏப்ரல் 29ந்தேதி 8 தொகுதிகளிலும், 5வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மே மாதம் 6ந்தேதி 7 தொகுதிகளிலும், 6வது கட்ட வாக்குப்பதிவு நடந்த மே 12ந்தேதி 8 தொகுதிகளிலும் சேர்ந்து 33 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மீதமுள்ள 9 தொகுதிகளிலும் வரும் 19நதேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் தொடங்கியது முதல் மத்திய படைகள் மேற்கு வங்க மாநிலத்தில் குவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே ராணுவம் மற்றும்  சிபிஐ உள்பட மத்திய அரசு படைகள்,  அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் நுழைய கடும் எதிர்ப்பு தெரிவித்து தனி ஆவர்த்தனம் காட்டி வந்த மம்தா, தேர்தல் காரணமாக மத்திய படைகள் குவிக்கப்பட்டதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதன் காரணமாக பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி பேசினார். அதுபோல பாஜக மீதும், மோடி மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார்.

தேர்தல் பிரசாரத்துக்கு வரும் பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களை தரையிறங்க அனுமதி மறுப்பதும், அவர்களின் பிரசார கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும், மேற்கு வங்கம் இந்தியாவில் தான் உள்ளதாக என்ற கேள்விகளை எழுப்பியது. அந்த அளவுக்கு மம்தாவின் அடாவடி நீடித்து வந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த வாக்குப்பதிவின்போது, பல மாநில அரசு  அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி நடவடிக்கை எடுத்தது. இதனால் கோபமடைந்த  மம்தா, தேர்தல் ஆணையம்  பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடியின் கண்ணசைவுக்கு ஏற்பவே செயல்படுவதாக கடுமையாக குற்றம் சாட்டினார்.

பாஜக தலைவர்களின்  உத்தரவுகளைத்தான் தேர்தல் ஆணையம் கேட்பதாகவும், தங்களின் குற்றச்சாட்டுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும்  மம்தா குற்றஞ்சாட்டினார். இதற்காக தன்மீது முடிந்தால் தேர்தல் ஆணையம் தன் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்றும், என்னை கைது செய்தாலும், எனக்கு அதுகுறித்து கவலை யில்லை  சவால் விட்டார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமித்ஷாவின் பேரணியின்போது, திரிணாமுல் கட்சியை சேர்ந்த மாணவர்கள் சிலர் கறுப்புக்கொடி காட்டி கோபேக் அமித்ஷா என்று கூறியதால், அங்கு வன்முறை வெடித்தது. இதன் காரணமாக மாநிலத்தின் மிக உயர்ந்த மனிதரான ஈஸ்வர வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டது. பொதுச்சொத்துக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக திரிணாமுல் கட்சியும், பாஜகவும் ஒருவர்மீது ஒருவர் சரமாரியாக குற்றம் சாட்டி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் ஒருநாள் முன்னதாகவே தேர்தல் பிரசாரத்தை முடிக்க அதிரடியாக உத்தரவிட்டது.

இதற்கான  சட்டப்பிரிவு 324ஐ அமல்படுத்தி, பிரசார நாளை குறைத்ததாக தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். மேலும் கலவரம் தொடர்பாக மாநில உள்துறை செயலர் அத்ரி பட்டாச்சார்யா மற்றும் சிஐடி பிரிவு டிஐஜி ராஜிவ் குமார் இருவரும் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டனர்.

தேர்தல் நடத்தும் முறையில் தலையிட்டதாக உள்துறை செயலர் நீக்கப்பட்டார் என்று தேர்தல் ஆணைய அதிகாரி சந்திர பூஷன் ஓஜா தெரிவித்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மம்தா  “மாநிலத்தில் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லை. இவ்வாறு செய்ததது முறையில்லாதது மற்றும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்று கூறினார். மேம், தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிராக வங்காள மக்கள் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பேசிய மம்தா, அமித்ஷா, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை கூட்டிவந்து வங்க தேசத்தில் கலவரத்தை ஏற்படுத்தினார் என்றும், மாநிலத்தின் அமைதியான சூழலை பாஜக கெடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் பெரும்பாலான இடங்களில் திரிணாமுல் கட்சியே ஆதிக்கம் செலுத்தினாலும், அதற்கு ஈடுகொடுக்கும் பாஜகவின் முயற்சி அங்கு வன்முறையாக மாறி வருகிறது.

மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலங்களான ஜார்கண்ட் மற்றும் பிகாரில் பாஜகவே ஆட்சியில் இருப்பதால், மேற்குவங்கத்திலும்காலூன்ற பாஜக பகிரத பிரயத்தனம் செய்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் மம்தாவின் நடவடிக்கை இருப்பதால், அங்கு பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை அவ்வப்போது இதுபோன்ற வன்முறைகள் மூலம் நிரூபித்து வருகின்றன.

மேற்கு வங்க  மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களிடையே  மோதல் அதிகரித்து வரும் நிலையலும், வரும் 19ந்தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு 9 தொகுதிகளில் நடைபெற உள்ளது.

வாக்குப்பதவின்போது, வன்முறை ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 9 தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான  மத்திய காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

அங்கு நடைபெற்று அரசியல் வன்முறை மற்றும் புகார்கள் குறித்துமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது  வரும் 23ந் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிய வரும்….

தாமரை மலர்கிறதா… புலி உறுமுகிறதா  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்….