சென்னை:
காஷ்மீர் விவகாரத்தை மறைக்கவே முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் குற்றம் சாட்டினார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப் பட்டுள்ளதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, மத்திய நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர் ப.சிதம்பரம். அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது காஷ்மீருக்கு அடிக்கடி பயணம் செய்ததன் காரணமாக, அந்த மாநிலத்தின் முழு நிலவரத்தையும் அறிந்திருந்தார்.
ஆனால், மோடி தலைமையிலான அரசு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முடி வெடுத்ததும், ப.சிதம்பரம் வெளியே இருந்தால், பிரச்சினை ஏற்படும் என கருதி, காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதும் அவரை கைது செய்துள்ளது. ப.சிதம்பரம் வெளியில் இருந்து மக்களிடம் அந்தப் பிரச்சி குறித்து பேசினால், ஏதாவது சிக்கல் ஏற்படும் என மத்திய பாஜக அரசு நினைத்து காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட சில நாள்களிலேயே அவரை மத்திய அரசு கைது செய்தது என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசியவர், காஷ்மீர் நிலம் வேண்டும் என்று ஆசைப்படும் மத்தியஅரசுக்கு காஷ்மீர் மக்கள் வேண்டாமா என்று அவர் கேள்வி எழுப்பினார். சிதம்பரம் இன்னும் சில நாட்களில்சிறையில் இருந்து அவர் வெளியே வருவார். அப்போது, காஷ்மீர் பிரச்னையைப் பற்றி மக்களிடம் விளக்கிப் பேசுவார். அதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.