சென்னை: பாமக-வின் மாம்பழம் சின்னம் குறித்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து , பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் பாமக தலைவராக அன்புமணியை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால், அவர் கட்சியின் சின்னம் உள்பட அனைத்தையும் கையாண்டு வருகிறார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாமகவினன் பெயர், கட்சியின் மாம்பழம்  மற்றும் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு  நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில்,  பாமகவின் மாம்பழம் சின்னத்தை அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததபோது ராமதாஸ் தரப்பில், “கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டால் சின்னத்தை முடக்கி வைப்பது தான் நடைமுறை, குலுக்கல் முறையில் சின்னத்தை கொடுக்கும் நடைமுறையும் பின்பற்றவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

அன்புமணி தரப்பில், “தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் ஆவணங்கள் அடிப்படையிலேயே தங்களது தரப்புக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது,” என விளக்கமளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ‘ஃப்ரெண்ட்லி மேட்ச்’ ஆடுகிறது எனத் தெரிவித்ததுடன், மாம்பழம் சின்னத்தை கேட்டு உரிமையியல் நீதிமன்றத்தை உடனடியாக நாட வேண்டும் என ராமதாஸ் தரப்புக்கு உத்தரவிட்டது. அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுவை மூன்றே நாட்களில் விசாரித்து முடிவை எடுக்க வேண்டும் எனவும் சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

மாம்பழம் சின்னம் விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து டாக்டர் ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு இன்று முறையீடு செய்யபட்டது.

அப்போது உங்கள் தரப்பில் மனுவாக தாக்கல் செய்தால் நாளை (மார்ச் 25) விசாரிப்பதாக தெரிவித்தார். அப்போது,இன்று பிற்பகலே மனுவை தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடந்து, மனுவின் நகலை அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]