புதுடெல்லி: வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல், இந்தியாவில் இறக்குமதியாகும் பொம்மைகள் அனைத்தும், கட்டாய தரப் பரிசோதனைகளில் தேறிய பிறகே அனுமதிக்கப்படும் என்றுள்ளார் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்.

தற்போதைய நிலையில், ஸ்டீல், ரசாயனங்கள், பார்மசூட்டிகல்ஸ், எலக்ட்ரிகல் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட மொத்தம் 371 வகையான பொருட்களுக்கு தரநிலை நிர்ணயிப்பை கட்டாயமாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தரநிலைகளுக்கான அமைப்பு(பிஐஎஸ்), அரசின் ஒரு நோடல் ஏஜென்சியாகும். இந்த அமைப்பானது, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் இணைந்து தரநிலைகளை அமைக்கிறது.

“பொம்மைகளுக்கான கட்டாய தரக் கட்டுப்பாட்டு அளவீடு, செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். இந்தவகையில், நாட்டின் முக்கிய துறைமுகங்களில், இறக்குமதியாகும் தயாரிப்புகளை தரப் பரிசோதனை செய்யும் வகையில், இந்திய தரநிலைகளுக்கான அமைப்பின் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்” என்று கூறினார் அமைச்சர் பஸ்வான்.

“கனரக இயந்திரங்கள், பாக்கெட் செய்யப்பட்ட தண்ணீர் மற்றும் பால் பொருட்களையும் தரக் கட்டுப்பாட்டு செயல்முறைக்குள் கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.