நெட்டிசன்:

சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் டாக்டர் ஃபஜிலா ஆசாத்

‘மனசே ஆற மாட்டேங்குது …’ இப்படி பெருமூச்சோடு தன் பிரச்னையைப் பற்றி சிலாகிக்காத வர்களே இல்லை எனலாம்.

என் நண்பனுக்கு நான் என்னென்னவோ உதவி செய்தேன்.. அதுவும் அவனுக்கு மிக வேண்டிய நேரத்தில் ஓடிப் போய் செய்தேன். ‘காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது’ என்கிறார் வள்ளுவர். ஆனால் அவன் கொஞ்சம் கூட நன்றியில்லாமல் என்னைப் பற்றி  ஏதேதோ பேசிக் கொண்டு திரிகிறான். இவன் உறவே எனக்கு வேண்டாம் என துடிப்பார்கள் சிலர்.

நான் இரவும் பகலுமாக தூக்கி வளர்த்த என் தம்பி, இறக்கை முளைத்தவுடன் பறந்தவன் தான் இன்று என்றாவது அவன் குரலை அலை பேசியில் கேட்கிறேன். இப்படி ஒரு தொலை தூர உறவு எனக்கு தேவையா என மருகுவார்கள் சிலர்.

உங்களுடைய துடிப்பு நியாயமானதாக இருக்கலாம், உங்கள் வருத்தம் ஏற்புடையதாக இருக்கலாம், ஓடி ஓடி செய்த உறவுகளின் புறக்கணிப்பின் வலி ஏற்க முடியாததாக இருக்கலாம். ஆனால் எந்த பிரச்னையாக இருந்தாலும், இப்படி மனதில் வைத்து வருந்தி கொண்டிருந்தால் அது ஆறவே செய்யாது மட்டுமல்ல, ஆறாத இரணமாகவே மனதில் தங்கி விடும்.

உங்களைப் பொறுத்தவரை ஏதோ ஆற்றாமையில் மீண்டும் மீண்டும்  நீங்கள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதில் என்ன தவறு இருக்கிறது என்று தோன்றும். ஆனால்.. இது நீங்கள் நினைப்பது போல் யாரோ செய்ததை உங்களுக்குள் நீங்களே ஏதோ நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்னும் போகிற போக்கில் நடக்கும் சிறு விஷயம் இல்லை. இது உங்கள் சக்தியை எல்லாம் உறைய செய்து உங்களை சரியான முறையில் செயலாற்ற விடாமல் தடுக்கும் பெரும் தடங்கள். அதனால் தான் அந்த  நிகழ்வுகளை, நீங்கள் எண்ணும்போதெல்லாம் மன பாரமாக சோர்வாக உணர்கிறீர்கள். சுழன்று வரும் இந்த நினைவுகள் உங்கள் உடலையும் பலவீனமாக்கி விடும். உறவுகளையும் பலவீனமாக்கீ விடும். மனம் மகிழ்ச்சியற்று தவிக்கும்.

இந்த மாதிரி வருத்தமான எண்ணங்களுக்கு ஆழ்மனம் என்ன பெயர் சொல்கிறது தெரியுமா ‘Energy Clot’. அதாவது உங்களையுமறியாமல் இந்த எண்ணங்கள் உங்கள் சக்திகளை எல்லாம் சரியான முறையில் செயலாற்ற விடாமல் உடலின் பல பகுதிகளில் ஆங்காங்கே உறைய வைத்து உடல் இயக்கத்தையே சீரில்லாமல் செய்து விடுகிறது. தவிர, மூளை விடுக்கும் கட்டளைகளை உடம்பெங்கும் கொண்டு செல்லும் நிவ்ரான்கள்(neurons) இந்த எனர்ஜி கிலாட்டினால் ( சக்தி உறைநிலை) ஒன்றுடன் ஒன்று சரியான முறையில் சிக்னெல்களை பறிமாறிக் கொள்ள முடியாமல் முரண்பட்டு, நோய் எதிப்பு சக்தி குறைந்து, உடம்பில் பல பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகிறது.

ஆக, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை இது நம் முன்னோர் சொன்னது மட்டுமல்ல. சுற்றம் பேணுபவனே ஆரோக்யமாக, சந்தோஷமாக இருக்கிறான் என்கிறது மருத்துவமும், வாழ்வியல் ஆய்வுகளும்.

அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு புதுமையான வரலாற்று சிறப்பு மிக்க ஆய்வு ஒன்று செய்தார்கள். பல நூறு பேர்களிடம் அவர்கள் இள வயதிலிருந்து வயோதிகம் வரை எது அவர்களை ஆரோக்யமாக வைத்திருக்கிறது, மகிழ்ச்சியைத் தரக் கூடியதாக இருக்கிறது, வாழ்க்கையில் ஒரு நிறைவைக் கொடுத்தது என்று நீண்ட ஆய்வு செய்தார்கள். 75 வருடமாக  தொடர்ந்து ‘லைவ்’ வாக நடந்த அந்த ஆய்வின் முடிவு மூன்று முக்கியமான உண்மைகளை சொன்னது.

சமூகத்தோடும், உறவுகளுடனும் தன் குடும்பத்தோடும் நெருக்கமான உறவோடு இருப்பவனே, உண்மையில் மகிழ்ச்சியோடு இருக்கிறான். உங்கள் குடும்பத்திற்குள் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் இருக்கலாம்.. ஆனால், பரஸ்பர புரிதலும் அன்பும் அக்கறையும் உங்களுக்கு இருந்தால் அது உங்களை ஆரோக்யமாக இருக்க செய்யும். உங்கள் வாழ்நாள் அதிகரிக்கும். 50 வயதில் உறவுகளோடு அன்போடு இருப்பவர்கள் 80 வயதிலும் தளராமல் வாழ்வார்கள். தவிர, நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்பதாக குடும்பத்தோடும் சமூகத்தோடும் ஒன்றி இருப்பவனின் மூளை மிக சுறுசுறுப்பாக இருக்கும் என்கிறது அந்த ஆய்வு.

இப்படி உறவுகளே மகிழ்ச்சியின் திறவுகோல் என்பது தெரிந்திருந்தாலும், தனி மரம் தோப்பாகாது, உறவுகளை ஒதுக்கி தனிமையில் இருக்கும் ஒருவனை வேண்டாத எண்ணங்கள் ஆக்ரமிக்கும், ஏதோ ஒன்றை இழந்தது போல் அவன் மனம் தவிக்கும் என அறிந்திருந்தாலும், உறவுகளைப் போற்ற முடியாமல் பலரும் தவிப்பதற்கு முதன்மையான காரணம், இந்த அவசர உலகத்தில் உங்கள் மீது ஏற்றப் பட்ட உண்மையான பாரங்களை விட்டும், உறவுகளை பாரமாகக் கருதி ஏதோ ஒரு வெற்று மாயையில், எதையோ வெற்றி எனத் தேடி நீங்கள் ஓடிக் கொண்டே இருக்குறீர்கள். முதலில் நீங்கள் அந்த வெற்றிடத்தை நிரப்புங்கள். வெற்றி தானே கிடைக்கும் என விரிகிறது அந்த ஆய்வு.

பல வருடங்களுக்கு முன்பு, பாலைவனங்களில் தார் சாலைகள் போடப் படாத கால கட்டங்களில்… ஒட்டகம் மட்டுமே புதையும் பாலை மனலில் வாகனமாக பயன்படுத்தப் பட்டபோது, ஒட்டகத்தை மணலில் உட்காரச் செய்து அந்த பயணி தன் பயணத்தில் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை எல்லாம் அதன்  நீண்ட முதுகில் மூட்டை மூட்டையாக ஏற்றுகிறார். ஒட்டகமும் அசையாமல் உட்கார்ந்திருக்கிறது. அவர் இப்போது ஒட்டகத்தை ஓட்டி செலவதற்காக எழுந்திருக்க சொல்கிறார். அது எழுந்திருக்க மறுக்கிறது!.

என்ன ஆயிற்று இந்த  ஒட்டகத்திற்கு.., அவர் குழம்பியவாறு அதை சுற்றி இருக்கும் கயிற்றை இழுத்து மீண்டும் மீண்டும் அதை எழ வைக்க முயற்சிக்கிறார். அது எழ மறுக்கிறது. அவர் அதை தன் கைகளால் தள்ளி எழச் சொல்கிறார். அது ஏதோ சமிஞ்கை காட்டுவது போல், சரமாரியாக மூட்டைகள் ஏற்றப் பட்ட தன் முதுகை வலதும் இடமுமாக அசைத்து விட்டு அந்த இடத்தை விட்டும் எழுந்திருக்காமல் வெறுமனே முரண்டு பிடிக்கிறது. அந்த பயணிக்கு ஒட்டகம் என்ன சொல்ல வருகிறது, அது ஏன் இப்படி தன்னுடன் ஒத்துழைக்காமல் முரண்டு பிடிக்கிறது என்பது பிடிபடுகிறது. இப்போது அவர் ஒன்றுமே இல்லாத சில காலி மூட்டைகளை ஒட்டகத்தின் மேல் ஏற்றுகிறார்.

ஒட்டகம் இன்னும் அதிகமாக முரண்டு பிடித்து எழாமல் அமர்ந்திருக்க, அவர் தனக்குள் சிரித்தவாறு ஒட்டகத்தின் கண்ணில் படுவதற்கேற்ப அந்த காலி மூட்டைகளை அதன் முதுகில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக தள்ளி விடுகிறார். ஒட்டகம் ஏதோ சாதித்த பெருமையில், எந்த பாரமும் குறையாமலே ஏதோ பாரம் இறங்கி விட்டது போல் தன் உடலை சிலிர்த்து எழுந்து பயணிக்கத் தொடங்குகிறது.

பெரும்பாலான உறவுகளில் இந்த வீம்பும் பிடிவாதமும் தானே முன்னின்று, ஏதோ ஒன்றிற்கு முரண்டு பிடித்துக் கொண்டு எந்த உறவையும் முறிக்கிறது. அவன் என்னை அவமானப் படுத்தி விட்டான்… அவன் சாரி சொல்லாமல் அவனோடு ஒரு போதும் பேச மாட்டேன் என உங்கள் நட்பையும் உறவையும் தள்ளி வைக்கச் செய்கிறது. உண்மையில் பாரமே இல்லாத ஒன்றை இறக்கி வைத்து விட்டு பெரும் பாரம் குறைந்தது போல் வீறு நடை போட வைக்கிறது.

எந்த ஒன்றிற்கும் உண்மையான பிரச்னையை புரிந்து கொண்டு அதை சீர் செய்ய வேண்டும் என்று நினைப்பதை விட, தங்கள் ஈகோ திருப்தி அடைய வேண்டும் எனும் எண்ணம் தானே பலரிடம் மேலோங்கி நிற்கிறது.

உறவுகள் மகிழ்ச்சியெனும் ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள், சிறு சிறு குறைகளை பெரிது படுத்தாமல், அவர்களை நெருக்கமாக வைத்துக் கொள்வதும், எங்கோ பறக்க விடுவதும், உங்கள் கைகளில் தான் இருக்கிறது. அதுவே உங்கள் மகிழ்ச்சியின் அளவை  தீர்மானிக்கிறது.