டில்லி

யூ டியூபில் வந்த ஒரு வீடியோவை பார்த்து ஒரு இளைஞர் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்களை அச்சடித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில லூதியானாவை சேர்ந்த 27 வயது இளைஞர் ரவி சந்து. இவர் தென்மேற்கு டிலியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் சமூக வலை தளமான யூடியூபில் ஒரு முறை கள்ள நோட்டு அச்சடிப்பது குறித்த வீடியோ ஒன்றை அபர்த்தார். அந்த வீடியோ அவர் மனதை மிகவும் கவர்ந்துள்ளது. தானும் அது போல அச்சடிக்க விரும்பினார்.

அதனால் ஒரு கம்பியூட்டர் மற்றும் பிரிடரை வாங்கி ரூ. 2000, ரூ.500 மற்றும் ரூ.200 மதிப்பிலான கள்ள நோட்டுக்களை சந்து அச்சடித்தார். அதன் பிறகு அவர் தனது கள்ள நோட்டுக்களை பஞ்சாப் மாநில கிராமப்பகுதிகளில் மாற்றத் தொடங்கினார். போலீசாருக்கு விவரம் தெரிய வந்த்ததால் அவர் அதன் பிறகு டில்லி நகரில் நோட்டுக்களை மாற்ற ஆரம்பித்தார்.

இவர் இந்த நோட்டுக்களை கூட்டம் மிகுந்த வாரச்சந்தைகள் மற்றும் இரவு நேரத்தில் கூஉட்டம் அதிகமுள்ள மதுக்கடைகள் ஆகியவற்றில் மாற்றினார். தன்னை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக ரவி சந்து அடிக்கடி தனது வசிப்பிடத்தை மாற்றிக் கொண்டு வந்துள்ளார். அத்துடன் ஒரு முறை தனது கள்ள நோட்டை அளித்த கடைகளுக்கு மிண்டும் அவர் செல்ல மாட்டார்.

கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்தது குறித்து ஏராளமான புகார்கள் வந்ததால் காவல்துறையினர் பல இடங்களில் இவருக்காக மறைந்திருந்தனர். ரவி சந்து கள்ள நோட்டுக்களை அளித்து பொருட்கள் வாங்க முயலும் போது பிடிபட்டுள்ளார். இவர் தன்னிடம் உள்ள கள்ள நோட்டுக்களை சரியான அளவில் வெட்டி அசல் நோட்டுக்கள் போலவும் தண்ணீரில் நனைத்து பிறகு காயவிட்டு பழைய நோட்டுக்களை போல் வைத்திருந்தார்.

அவரிடம் இருந்து ரூ. 1.38 லட்சம் மதிப்பிலான நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ரவி சந்து விசாரணையில் தாம் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நோட்டுக்களை அச்சடித்ததாக தெரிவித்துள்ளார். ரவி சந்துவை கைது செய்த காவல்துறையினர் அவருக்கு யாரும் கூட்டாளிகள் உள்ளனரா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.