மும்பை,

பணமதிப்பு நீக்கப்பட்ட ரூ.1  லட்சத்தை மாற்றித்தர ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடக்கோரி மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி மேற்கொண்ட உயர்பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக புதுபுதுப் பிரச்னைகள் வந்து கொண்டிருக்கின்றன. மும்பை மாதுங்கா பகுதியில் வசித்துவரும் சுனில் மோடி என்பவர் வரதட்சணை பிரச்னையில் பேரில் கடந்த  2013 ம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்டு கைது  செய்யப்பட்டார்.

இதுதொடர்பான விசாரணையின்போது இவரிடமிருந்த ஒரு லட்சம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட  அவர் மார்ச் 22 ம் தேதிதான் விடுதலையானார். அப்போதுதான் போலீஸார் அவரிடமிருந்து பறிமுதல் செய்த ரூ.1 லட்சத்தை திரும்ப கொடுத்துள்ளனர்.ஆனால் இந்தப்பணம் முழுவதும் 500, 1000 ரூபாய்களாக இருந்தன.

பணத்தை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என அங்கு சென்றால், என் ஆர் ஐ க்களுக்கு மட்டும்தான் மாற்றித்தர முடியும். என்று கூறி அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர்.  இருப்பினும் மனம்தளராத சுனில்மோடி மும்பை நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் அவர், போலீசார் தன்னிடமிருந்து பறிமுதல் செய்த ரூ.ஒரு லட்சம், இரண்டாண்டுகளுக்குப் பிறகு  கடந்த 22-ம் தேதிதான் தனது கைக்கு கிடைத்தது.

போலீசார்தான் தங்களிடம் இருந்த  பணத்தை உரிய காலத்தில் மாற்றியிருக்கவேண்டும். அவர்கள் அதை செய்யவில்லை. தவறு என்னுடையது அல்ல. அதனால் ரிசர்வ் வங்கி பணத்தை பெற்றுக்கொண்டு புதிய பணத்தை வழங்க அறிவுறுத்தும்படி கேட்டுக்கொண்டார். இந்த மனு மீதான விசாரணையை வரும் திங்கட் கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.