மலேசியாவின் பினாங்கு பகுதியில் நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

இதுகுறித்து பினாங்கு காவல்துறை கூறியுள்ளதாவது, “பினாங்கின் சுங்கை நியோரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு வெளியே செவ்வாய்க்கிழமையன்று தனது குழந்தையை அழைத்துச் செல்ல ஒருவர் காரில் வந்துள்ளார்.

குழந்தை வரும் வரை ஓட்டுநர் இருக்கையை சற்று சாய்த்து அமர்ந்திருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் அங்கு வேகமாக வந்த இரண்டு இளைஞர்களைக் கண்டதும் தனது காரின் இருக்கையை மேலும் சாய்த்து படுத்துள்ளார்.

அதேவேளையில், அந்த இளைஞர்கள் கண் இமைக்கும் நேரத்தில் காருக்குள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் ஐந்து குண்டுகள் பாய்ந்த நிலையில் காரின் இருக்கையை சாய்த்து படுத்துக்கொண்டதால் அந்த நபர் எந்த ஒரு காயமுமின்றி உயிர் தப்பியுள்ளார்.

பள்ளி ஒன்றின் வாசலில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், காரில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் இதற்கு முன் சமூக விரோத கும்பலுடன் சேர்ந்து பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதும் 4 வழக்குகளில் சிக்கியிருந்ததும் தெரியவந்தது.

தற்போது திருந்தி வாழ்வதாகக் கூறப்படும் நிலையில் முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றிருக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் தீர்மானித்தனர்.

இருந்தபோதும், தன்னை யார் சுட்டார்கள் மற்றும் எதற்காக சுட்டார்கள் என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அந்த கார் ஓட்டுநர் கூறியுள்ள நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.