லண்டன்:
2016ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பால் பீட்டி இந்த ஆண்டுக்கான மேன்புக்கர் பரிசை வென்றுள்ளார்.
புக்கர் பரிசு (Booker Prize) அல்லது புனைவுகளுக்கான மேன் புக்கர் பரிசு (Man Booker Prize for Fiction), ஆங்கில மொழியில் எழுதப்படும் சிறந்த முழுநீள புதினங்களுக்கு வழங்கப்படும் பரிசாகும். பொதுநலவாய நாடுகளை அல்லது அயர்லாந்துக் குடியரசைச் சேர்ந்தவர்களால் எழுதப்படும் புதினங்களுக்கே இப்பரிசு வழங்கப்படுகின்றது. இது 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இலக்கியத்துக்காக வழங்கப்படும் பரிசுகளில் உலகிலேயே பலரும் அறிந்த பரிசுகளில் ஒன்றாக இது திகழ்கின்றது. புனைவு இலக்கிய எழுத்தாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த பெருமைகளில் ஒன்றாகவும் இது கருதப்படுகின்றது.
உலக அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது “மேன் புக்கர் பரிசு”. இந்த விருதை, இயன் மெக் ஈவன், ஐரிஸ் முர்டோச், சல்மான் ருஷ்டி உள்ளிட்ட புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளரான அருந்ததி ராய் 1997ம் ஆண்டு மேன் புக்கர் பரிசு பெற்றார். அதையடுத்து இந்தியாவில் பிறந்த கிரண் தேசாய் 2006ம் ஆண்டு மேன்புக்கர் பரிசு பெற்றனர்.
கடந்த ஆண்டு ஜமைக்கா நாட்டு எழுத்தாளர் மர்லான் ஜேம்ஸ் என்பவருக்கு 2015ம் ஆண்டுக்கான மேன் புக்கர் கிடைத்தது.
2016ஆம் ஆண்டிற்கான ”மேன் புக்கர் பரிசு” குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கில்ட் ஹாலில் நடைபெற்றது.
இதில் ”தி செல் அவுட்” என்ற நாவலை எழுதியதற்காக அமெரிக்க எழுத்தாளர் பால் பீட்டிக்கு மேன் புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்த நாவல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர்கள் அனுபவிக்கும் நிறவெறி பிரச்னைகள் சம்பந்தப்பட்டது. துயரம், நகைச்சுவை ஆகியவை கலந்து படிப்பவர்களுக்கு விருந்தாக அமையும் என்று நடுவர்கள் தெரிவித்தனர்.
‘மேன் புக்கர்’ பரிசு பெற்ற எழுத்தாளர் பால் பீட்டி,
இந்த இடத்தை பிடிப்பதற்காக நீண்ட நெடிய போராட்டத்துடன் கூடிய பயணத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார். இந்த விருதை பெறும் பால் பீட்டிக்கு 64,100 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். இதன்மூலம் மேன் புக்கர் பரிசை பெறும் முதல் அமெரிக்கர் என்ற பெருமையை பால் பீட்டி பெற்றுள்ளார்.
இந்த விருதை இதுவரை எந்த ஒரு அமெரிக்கரும் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.