தெலுங்கானா மாநிலம் ஜெக்தியால் மாவட்டத்தை சேர்ந்த பன்யாலா ராஜு என்பவர், சவுதி அரேபியா நாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அங்கிருந்தபடி அவர், தெலுங்கானா முதல்- அமைச்சர் சந்திரசேகர ராவ் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை , சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார்.

இதுகுறித்து விசாரித்த ஐதராபாத் ’சைபர்கிரைம்’ போலீசார், வலைத்தளத்தில் முதல்வர் குறித்து வதந்தி பரப்பியவர் சவுதி அரேபியாவில் இருப்பதை கண்டு பிடித்தனர். அவர் எப்போது இந்தியா வந்தாலும், கைது செய்யும் நோக்கில் அனைத்து விமானநிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்த தகவல் பன்யாலாவுக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை.

சவுதி அரேபியாவில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மும்பை விமானநிலையம் வந்து இறங்கிய பன்யாலாவை, விமான நிலைய குடிஉரிமை அதிகாரிகள் பிடித்து வைத்துக்கொண்டு, ஐதராபாத் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக மும்பை புறப்பட்டு சென்ற ஐதராபாத் போலீசார், பன்யாலா ராஜுவை ,கைது செய்து தெலுங்கானாவுக்கு கொண்டு வந்து விசாரித்து வருகிறார்கள்.

-பா.பாரதி.