கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலை 7 கட்டங்களாக நடத்தும் தேர்தல் கமிஷன் அறிவிப்பை, அம்மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது.
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான தேதி விபரங்களை சமீபத்தில் தேர்தல் கமிஷன் அறிவித்தது. அப்போது, உத்திரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த அறிவிப்புக்கு மற்ற 2 மாநிலங்களிலிருந்து இதுவரை எதிர்ப்பு எதுவும் வராத சூழலில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ‘மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தவேண்டிய அவசியமென்ன? மத்திய அரசு சார்பில், தேர்தல் கமிஷனுக்கு, மாநில சட்டம் – ஒழுங்கு குறித்து தவறான தகவல் அளிக்கப்பட்டதாலேயே, தேர்தல் கமிஷன் இந்த முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்று பாரதீய ஜனதா மீது குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், இந்த அறிவிப்பை அவரின் அரசியல் எதிரியான பாரதீய ஜனதா வரவேற்றுள்ளது. சட்டம் – ஒழுங்கு மோசமாக இருக்கும் மேற்குவங்கத்தில், 7 கட்ட தேர்தல் என்ற அறிவிப்பு நியாயமானதே என்று அந்த கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
– மதுரை மாயாண்டி