லக்னோ:
பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என வர்ணித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் சிலரின் பேச்சுகள் சர்ச்சையை உருவாக்கும் விதமாக அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி பா.ஜனதா எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் மொபைல் போன் செயலி வழியாக கடந்த சில நாட்களுக்கு முன் கலந்துரையாடினார்.
அப்போது அவர், “நாம் தொடர்ந்து தவறுகள் செய்வதன் மூலம் ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகிறோம். ஊடகங்களின் கேமரா முன்பாக ஏதோ சமூக விஞ்ஞானிகள் போலவும், ஆய்வாளர்கள் போலவும் வார்த்தைகளை கொட்டுகிறோம். இது நம்மை சிக்க வைத்து விடுகிறது.
பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமை என்று எந்த பிரச்சினை என்றாலும் நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகள் ஊடகங்களில் பெரிதாக்கப்படுகின்றன. இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நாம் நமது கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது.
எனவே பொறுப்பற்ற முறையில் அர்த்தமற்ற கருத்துகள் தெரிவிப்பதையும், ஆர்வக்கோளாறில் கருத்துகள் கூறுவதையும் உடனடியாக நாம் நிறுத்திக் கொள்ளவேண்டும். இதற்காக ஊடகங்களை நாம் குறை கூறக்கூடாது” என்று பேசினார்.
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுரேந்திரா சிங், “ மேற்கு வங்காளத்தின் சூர்ப்பனகை மம்தா பானர்ஜி” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ மேற்குவங்கத்தில் மக்கள் தெருக்களில் கொல்லப்பட்டு வருகின்றனர். இதைத் தடுக்க முதல்வர் மம்தா, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்கு வங்காளத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
இதே நிலை தொடர்ந்தால் ஜம்மு மற்றும் காஷ்மீர் போல் வங்காளம் ஆகி விடும். கட்டிடத்தின் பெயர் கன்சியாம் சிங் பெயரில் இருக்கும். ஆனால் அங்கு முஸ்லிம் ஒருவரே இருந்திடுவார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இவர், “ வரும் 2024ம் ஆண்டில் இந்தியா முழுவதும் இந்து நாடாக ஆகி விடும்” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஆவார்.