சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியான , காவல்துறையைச்சேர்ந்த முதல் நபரான சென்னை மாம்பலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உடல் இன்று கண்ணம்மா பேட்டை சுடு காட்டில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

இந்தியா முழுவதும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகத்தில் தொற்று பரவல் உச்சம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி,  தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகப் பணி யாற்றியவர் பாலமுரளிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட, அவருக்கு சோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, கடந்த 5-ம் தேதி தனிமைப்படுத்தப் பட்டார். ஆனால் அவருக்கு  காய்ச்சல்  தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த 7-ம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது உடல், திநகரில் உள்ள  கண்ணம்மாப்பேட்டை இடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அங்கு காவல்துறை சார்பில் அவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது.