கொல்கத்தா:
சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சிமுறை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய பாடத்திட்டங்களை குறைக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் மம்தா வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சிமுறை, மதச்சார்பின்மை, குடியுரிமை போன்ற பாடத்திட்டங்களை நீக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தற்போது கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் மாணவர்களின் படிப்பு சுமையை குறைக்க மத்திய அரசு இவ்வாறு செய்துள்ளது.
தற்போது சிபிஎஸ்சி எடுத்துள்ள இந்த முடிவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸின் தலைவரான மம்தா பானர்ஜி, கூட்டாட்சி முறை, மதசார்பின்மை, மற்றும் குடியுரிமை போன்ற பாடங்களை பாடத்திட்டத்திலிருந்து எக் காரணத்தினாலும் குறைக்க கூடாது என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளார்.
மேலும் இதைப்பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், சிபிஎஸ்சி தற்போது 11 மற்றும் 12-ஆம் வகுப்பிற்கு, 2020-2021 ஆம் ஆண்டிற்கான பாடத்திட்டத்தை குறைக்க முடிவெடுத்துள்ளனர். தற்போதுள்ள இந்த இக்கட்டான காலகட்டத்தில் பாட திட்டத்தை சிறிது குறைப்பது நல்லது தான், ஆனால் முக்கிய பாடங்களான கூட்டாட்சி முறை, மதச்சார்பின்மை, குடியுரிமை போன்றவற்றை மாணவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகையால் இந்த பாடங்களை எக்காரணத்தைக் கொண்டும் பாடத்திட்டத்திலிருந்து குறைக்க கூடாது என்று அவர் பதிவிட்டுள்ளார்.