கொல்கத்தா

சிரியர் நியமன ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை  மம்தா பானர்ஜி பதவி நீக்கம் செய்துள்ளார்.

கடந்த 22 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாகக் கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.   சோதனையில் மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையொட்டி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா முகர்ஜி கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் 10 நாட்கள் காவலில் விசாரிக்கக் கொல்கத்தா நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதி வழங்கியது.  கடந்த 26ம் தேதி கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமைச்சர் பார்த்தா, நடிகை அர்பிதாவை அருகருகே அமர வைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தினர்.

அமைச்சருடன் அர்பிதா முகர்ஜி

நேற்று மீண்டும் அர்பிதா முகர்ஜி வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மேலும் ரூ.20 கோடியைப் பறிமுதல் செய்துள்ளனர்.  தவிர அவரது வீட்டிலிருந்து 20 செல்போன்கள், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.  இதன் அடிப்படையில்  சட்டர்ஜியிடம் அமலாக்கப்பிரிவு நடத்திய விசாரணையில் அவருக்கு எங்கெல்லாம் சொத்துக்கள், வீடுகள் இருப்பது தெரிய வந்ததையடுத்து, தெற்கு கொல்கத்தாவில் உள்ள ராஜ்டங்கா பகுதியிலும், பெல்ஹாரியாவிலும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

சாட்டர்ஜிக்கு சொந்தமான வீடுகள் பூட்டப்பட்டிருந்ததால், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பூட்டை உடைத்துச் சென்று ஆய்வு  செய்து கட்டுக்கட்டாக ரூ.28 கோடி ரொக்கப்பணம், நகைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.   ஏற்கனவே கடந்த 5நாட்களுக்கு முன் சாட்டர்ஜிக்கு சொந்தமான வீட்டில் ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.28 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.   அத்துடன் பல முக்கிய ஆவணங்களையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  தற்போது  அவரை அமைச்சரவையில் இருந்து மம்தா நீக்கி உள்ளார்.