கொல்கத்தா

புல்வாமா தாக்குதல் மக்களவை தேர்தலுக்கு முன்பு நடந்தது குறித்து சந்தேகம் உண்டாவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி அன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லபட்டனர்.  இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது பொறுப்பு ஏற்றது. உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த தாக்குதல் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ”புல்வாமா தாக்குதல் மக்களவை தேர்தலுக்கு முன்பு நடந்தது எவ்வாறு? எப்படி பாகிஸ்தானுக்கு தேர்தலுக்கு முன்பு இந்த தாக்குதலை நடத்த தோன்றியது? சரியாக பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் இது போன்ற தாக்குதல் நடப்பதால் ஒரு குடிமகள் என்னும் உரிமையில் எனக்கு சந்தேகம் வருகிறது.

இதற்கு முன்பு பாகிஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல்நேரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதிலும் சந்தேகம் எழுகிறது. இந்த தாக்குதல் குறித்து உளவுத்துறை தகவல் அளித்தும் அரசு ஏன் தாக்குதலை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்ல?

இந்த தாக்குதலுக்கு பிறகு பிரதமரும் அமித்ஷாவும் அவர்கள் மட்டுமே தேசபக்தர்கள் போலவும் நாமெல்லாம் வெளிநாட்டினர் போலவும் தினமும் பேசி வருகின்றனர்.

இந்த மாதம் 8 ஆம் தேதி உளவுத் துறை அனுப்பிய கடிதத்தின் நகலை நான் மொபைல் இணையம் மூலம் தேடி வைத்திருந்தேன். எனது மொபைல் உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஆதாரங்களை நான் விரைவில் வெளியிடுவேன்.“ என தெரிவித்துள்ளார்.