கொல்கத்தா
நிதி அயோக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதால் தமது மாநிலத்துக்கு எவ்வித பயனுமில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நிதி அயோக் என அழைக்கப்படும் திட்ட ஆணையம் பல கொள்கை முடிவுகளை எடுக்க உள்ளது. அதற்காக பிரதமர் மோடியின் தலைமையில் வரும் 15 ஆம் தேதி அன்று ஒரு கூட்டத்தை கூட்ட உள்ளது. அக்கூட்டத்தில் நாட்டின் முன்னேற்றம் குறித்த பல விஷயங்கள் விசாரிக்கப்பட உள்ளன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள போவதில்லை என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அவர் தனது கடிதத்தில், “நிதி அயோக் பொருளாதார அதிகாரம் அற்ற அமைப்பாகும். எனவே அதனால் மாநில திட்டங்கள் குறித்த எவ்வித முடிவும் எடுக்க முடியாது.
இவ்வாறு பொருளாதார முடிவு எடுக்க அதிகாரமில்லா ஆணைய கூட்டத்தில் பங்கேற்பதால் எவ்வித பயனும் இல்லை. ஆகையால் நான் இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளப் போவதில்லை.” என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பும் பல முறை மம்தா பானர்ஜி இந்த திட்ட ஆணையத்தின் கூட்டத்தில் கலந்துக் கொள்ளாமல் இருந்துள்ளார்.