கொல்கத்தா
இந்திய விமானப்படை தாக்குதல் குறித்த விவரஙக்ளை பிரதமர் அளிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதி இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் காஷ்மீர் எல்லையில் முகாமிட்டு மேலும் பல தற்கொலை படை தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வந்தன. அதை ஒட்டி இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தி அந்த முகாம்களை அடியோடு அழித்துள்ளனர்.
ஆனால் அந்த தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்னும் தகவல் வெளியாகவில்லை. அதன் பிறகு இந்திய எல்லை தாண்டி பாகிஸ்தான் குண்டு வீசியது. அவர்களை விரட்டி சென்ற விமானப்படை விமானங்களில் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட்தாகவும் விமானி அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தது தெரிந்ததே. ஆனால் மற்றொரு விமானம் குறித்து எவ்வித தகவலும் வெளி வரவில்லை.
இதை ஒட்டி மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, “இந்திய விமானப்படை தாக்குதலுக்கு பிறகு பிரதமர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. நாங்கள் இது குறித்து விவரங்களை தெரிந்துக் கொள்ள விரும்புகிறோம்.
எந்த இடத்தில் குண்டு போடப்பட்டது மற்றும், எத்தனை பேர் மரணம் அடைந்தனர் போன்ற தகவல்களை அளிக்க வேண்டும். நான் வெளிநாட்டு ஊடகங்களை படித்து வருகிறேன். அவற்றில் யாரும் கொல்லப்படவில்லை எனவும் ஒரு சில ஊடகங்களில் ஒருவர் கொல்லப்பட்டார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
உண்மையில் நடந்தது என்ன என்பது யாருக்கும் சரியாக தெரியவில்லை. அதனால் எங்களுக்கு இது குறித்த விவரங்களை பிரதமர் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.