சென்னை: பா.ஜ.க.வின் வகுப்புவாத அலையை மதசார்ப்பற்ற தலைவரான மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்துவார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியின் மகனுமான அபிஜித் முகர்ஜி கூறினார்.
மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய பல தலைவர்களும் மீண்டும் தாய்கட்சிக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில், மறைந்த முன்னாள் ஜானதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி நேற்று திரிணாமுல் கட்சியில் இணைந்துள்ளார்.
நாடு முழுவதும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளில் எதிர்க்கட்சிகள் இப்போதே களமிறங்கி வருகின்றன. பாஜகவை வீழ்த்துவதே ஒரே நோக்கமாக கொண்டு மம்தாவும் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இதற்காக முக்கிய தலைவர்களை மாற்றுக்கட்சிகளில் இருந்து இழுக்கும் வேலைகளையும் அரசியல்கட்சிகள் தொடங்கி விட்டன.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான அபிஜித் முகர்ஜி, திரிணாமுல் கட்சியில் இணைய போவதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் கசிந்தன. அது நேற்று உண்மையானது. நேற்று மாலை திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அபிஜித் முகர்ஜி அக்கட்சியில் இணைந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அபிஜித் முகர்ஜி, பா.ஜ.க.வின் வகுப்புவாத அலையை சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் நிறுத்தி மம்தா வெற்றி பெற்றுள்ளார். அவர் நாட்டின் மிகவும் நம்பகமான மதச்சார்பற்ற தலைவர். வருங்காலத்தில் மற்றவர்களின் ஆதரவுடன் நாடு முழுவதும் பா.ஜ.க.வின் வகுப்புவாத அலையை நிறுத்தும் திறன் பெற்றவர் மம்தா பானர்ஜிக்கு உண்டு என்று புகழ்ந்தார்.
மேலும், தனக்கு காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் பதவி தவிர, எந்த குழுவிலோ அல்லது எந்த பதவியிலோ அமர்த்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியவர், திரிணாமுல் காங்கிரசில் ஒரு சிப்பாய் வீரனாக இணைந்துள்ளேன். கட்சி அறிவுறுத்தல்படி செயல்படுவேன். பா.ஜ.க.வுக்கு எதிராக போராடுவேன் என தெரிவித்தார்.