சென்னை: மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநர் இல.கணேசன் குடும்ப விழாவில் பங்கேற்க சென்னை வரும் தரும், மேற்குவங்க முதல்வர், மம்தா பானர்ஜி நாளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில பொறுப்புஆளுநராகவும் இருப்பவர் இல.கணேசன். அவரது அண்ணன் எல்.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா நாளை மறுதினம் (3-ம் தேதி) சென்னையில் கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்குமாறு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று, விழாவில் பங்கேற்பதற்காக மம்தா நாளை மாலை சென்னை வருகிறார்.
இந்த நிலையில், தனது சென்னை வருகையின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நாளை மாலை தமிழகத்துக்கு வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம்அலுவலகத்தில் சந்தித்து பேச உள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது