கொல்கத்தா:
2021ம்ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் பிரபல தேர்தல் சூத்திரதாரி பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் போட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா.
பிரபல தேர்தல் சூத்திரதாரியான பிரசாந்த் கிஷோர் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்கு முடிவுகட்டும் வகையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றி, பல்வேறு வியூகங்களை வகுத்து கொடுத்தார். அதன்படி செயல்பட்டு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் மட்டும் பாராளுமன்ற தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றார். அத்துடன் மாநிலத்திலும் ஆட்சியை பிடித்து முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
இதன் காரணமாக பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர் ஏற்கனவே 2012ம் ஆண்டு குஜராத்தின் பாஜக வெற்றிக்காக பணியாற்றி, மோடியை முதல்வராக்கி னார். அதுபோல கடந்த 2014 மக்களவை தேர்தலில் மோடிக்காக பணியாற்றி மோடியை பிரதமராக்கினார். இதற்கான பணிகளில் பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகங்கள் காரணம் என்று கூறப்படுகிறது.
அதுபோல பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சிக்காகவும் பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகங்கள் வகுத்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் சரிந்து வரும் தனது மதிப்பை உயர்த்தும் வகையிலும், 2011ம் ஆண்டு நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் வகையில் தேர்தல் வியூக சூத்திரதாரி பிரசாந்த் கிஷோருடன் மம்தா பானர்ஜி உடன்பாடு ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று மம்தா பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் மம்தா பானர்ஜியுடன் இணைந்து பணியாற்ற அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதன்மூலம், பிரசாந்த் கிஷோர் அடுத்த மாதம் முதல் மம்தா பானர்ஜியுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜ மீண்டும் மேற்குவங்கத்தில் பல தொகுதிகளில் வெற்றிபெற்று மக்களிடையே அதன் செல்வாக்கு வளர்ந்து வருவதை கண்டு சற்று மிரண்டு போய் உள்ள மம்தா, இன்னும் இரு ஆண்டுகளில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், இப்போதே அதற்கான பணிகளில் இறங்க தொடங்கி விட்டார். அதற்கான தேர்தல் வியூகங்களை வகுக்கும்படி பிரசாந்த் கிஷோரிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் கேட்டுக்கொண்டதாகவும், அவருடன் ஒப்புதல் தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.