கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்த நிலையில், அவர் மீண்டும் போட்டியிட வசதியாக பவானிப்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தபோதிலும், மம்தா போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். இருந்தாலும் அரசியல் சட்டப்படி மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
இதையடுத்து அவர் 6 மாத காலத்திற்குள் எம்எல்ஏ வாக பதவி ஏற்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதுகுறித்து, தனது கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, மம்தா போட்டியிடும் வகையில், பவானிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சோவன்தேவ் சாட்டர்ஜி, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து, கட்சியின் ஒப்புதலுன் ராஜினாமா செய்தார்.
இந்த தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட உள்ளார்.