சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு ஹோமியோபதி சிகிச்சை அளிக்க தனி மையம் திறக்கக் கோரி முதல்வருக்கு சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக்கம் ஆல்பம்30 மருந்தை அனைவருக்கும் வழங்கவும், கொரோனா நோயாளிகளுக்கு ஹோமியோபதி மூலம் சிகிச்சை வழங்க தனி சிகிச்சை மையங்கள் அமைக்க வேண்டி, சென்னையைச் சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் பூவேந்தன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தமிழக முதல்வர் ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக சுகாதாரத்துறை இயக்குனர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குனர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவரது கடிதத்தில், தான் 12 வருடங்களாக சென்னையில் சாந்தம் ஹோமியோபதி என்ற  பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறேன்.  மத்தியஅரசாங்கத்தின் ஆயுஷ் (AYUSH) கீழ் செயல்படும் ஹோமியோபதி சிகிச்சை முறையின்கீழ் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆர்சனிக்கம் ஆல்பம்30 அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று சென்ற வருடம் மே மாதம் 19ந்தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். (வழக்கு எண்: WP NO.7681 of 2020). அதைத்தொடர்ந்து, தமிழக அரசு ஹோமியோபதி மருந்தை மக்களுக்கு இலவசமாக வழங்கியது.

தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், மீண்டும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக்கம் ஆல்பம்30-ஐ பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கவும், கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஹோமியோபதி சிகிச்சை மூலம் இதுவரை 7ஆயிரம் கொரோனா நோயாளிகளை காப்பாற்றி உள்ளோம். சிகிச்சை பெற்ற ஒருவர் கூட இதுவரை உயிரிழக்கவில்லை.

எனவே, தமிழகஅரசு, சித்தா, ஆயுர்வேதா போன்று ஹோமியோபதி மருத்துவர்களை பயன்படுத்தி கொரோனா நோயிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சித்தா, ஆயுர்வேதா சிகிச்சை போன்று, ஹோமியோபதி சிகிச்சை முறைக்கு என தனியாக ஒரு மருத்துவமனை வளாகம் ஏற்படுத்தி தரும்படி, ஹோமியோபதி மருத்துவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சென்னை கொரட்டூரில் சாந்தம் ஹோமியோபதி மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் ஜேசையா ஆன்டோ பூவேந்தன் என்பவர், ஹோமியோபதியில் முதுகலை (MD) பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.