கொல்கத்தா
தம்மை மணிப்பூர் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் மேதேயி சமுதாய மக்கள் பழங்குடி அந்தஸ்து கோரி வருகின்றனர். உச்சநீதிமன்றம் இது குறித்த வழக்கை விசாரித்து இது தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3-ம் தேதி பேரணி நடைபெற்றது.
அப்போது மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. அங்கு ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த கலவரத்தில் இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது வன்முறை கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இவ்வேளையில் மணிப்பூருக்குச் செல்ல அனுமதி வழங்கும்படி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தாம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க மணிப்பூருக்குச் செல்ல அனுமதிக்கும்படி மத்திய அரசிடம் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.