கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவருமான மம்தா பானர்ஜி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.

மேற்கு வங்க மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 26ஆம் தேதியுடனும் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, அங்கு 8கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி 294 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும் மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக 30 தொகுதிகளுக்கு மார்ச் 27ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 10) தொடங்கியுள்ளது.

வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: மார்ச் 19ந்தேதி என்றும், 20ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22ந்தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 291 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது, அங்கு அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வரிசையாக பாஜகவுக்கு தாவி வரும் நிலையில், மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில், பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கின்றனர். இதனால் மம்தா பானர்ஜிக்கு இந்த தேர்தல் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அவர் போட்டியிடும், நந்திகிராமில், ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுவேந்து அதிகாரி, தற்போது பாஜகவில் இணைந்து மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, நந்திகிராம் தொகுதியிலேயே மம்தா போட்டியிடுகிறார்.