மாமாங்கம் – திரை விமர்சனம்

 

மாமாங்கம் சேரர் காலத்தில் கேரளாவின்  மலபார் மற்றும் கோழிக்கோடு பகுதியில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடந்த ஒரு திருவிழா.

இந்த திருவிழாவை மையமாக வைத்து எழுத நினைத்த கதைக்கு மாமாங்கம் என்று பெயரிட்டு.  பதினேழாம் நூற்றாண்டிற்கு எடுத்துச் செல்லும் Period Drama இந்த  படம்.

Period படத்திற்கே உண்டான லாஜிக் பார்க்காதே  கேள்வி கேட்காதே என்பதுபோல். படம் வரலாற்று  ரீதியாகத் துல்லியமாக எடுக்கப்பட்டது அல்ல சினிமாவிற்காக எடுக்கப்பட்டது என்ற பொறுப்புத்துறப்புடன் ஆரம்பமாகிறது படம்.

வல்லவநாட்டைச் சேர்ந்த ‘சாவேரி’ இனம் தங்களிடம் இருந்து ‘சாமுத்ரி’ இனத்தால் பறிக்கப்பட்ட உரிமையையும் ஆட்சியையும் மீட்டெடுக்க. ‘சாவேரி’ இனத்து ஆண் பிள்ளைகளை மரணத்திற்குத் துணிந்த தற்கொலைப் படையாக வளர்க்கிறார்கள்.

இம்முறை நடக்கும் மாமாங்கத்தில் தங்கள் பகையைத் தீர்த்துக்கொள்ள ‘சாவேரி’ இனத்திலிருந்து உன்னி முகுந்தன் மற்றும் மாஸ்டர் அச்சுதன் ஆகிய இருவரும் செல்கிறார்கள்

உன்னி முகுந்தனுக்கு வசனம் அதிகம் தரப்படவில்லை என்றாலும் சண்டைக் காட்சிகளில் ஈடு செய்கிறார்

இவர்கள் இருவருக்கும் பக்கபலமாக வரும் கதாபாத்திரம் தான் மம்முட்டி.

மம்முட்டி இதே ‘சாவேரி’ இனத் தலைவனாக இதற்கு முன் ஒரு மாமாங்க திருவிழாவில் ‘சாமுத்ரி’ தலைமையை ஒழிக்கப் போராடி, தன் நண்பர்களை  இழந்து தோல்வியுறுகிறார். சொந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார். பின்னர் போரை வெறுத்து நாடு திரும்பாமல் சுற்றித் திரிகிறார்.

மம்முட்டிக்கு ஆக்ஷன் காட்சிகள் குறைவு, ஆனால் உன்னி முகுந்தனுக்கும் சேர்த்து மம்முட்டி  வசனம் பேசுகிறார்.

மம்முட்டி படம் என்று நினைத்துச்  செல்பவர்களுக்கு, அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் சற்று குறைவே என்பது வருத்தமளிக்கிறது.

மம்முட்டி அறிமுக காட்சியில் பெண்களைப் போன்று உடலசைவு நளினம் காட்டும் முயற்சி பலிக்கவில்லை என்றாலும் எடிட்டிங் மற்றும் பின்னணி இசையில் ரசிக்கும்படி உள்ளது.

சிறுவனாக வரும் மாஸ்டர் அச்சுதன் நடிப்பு சூப்பர். குறிப்பாகச் சண்டைக் காட்சிகளில் துள்ளி விளையாடுவதும், வாள் சுழற்றும் விதமும் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.

சாவிற்கு அஞ்சாத சாவேரியர்களின் கதையாக இருந்த போதும் முழு படமும் இதையே சொல்வது போரடிக்கும் என்பதால்.

இடைச்செருகலாக, மாமாங்க திருவிழாவிற்கு வரும் ஒரு வெளிநாட்டு வியாபாரியின் கொலையும் அதைத்  துப்பறியும் மந்திரி  (சித்திக்) என்று மற்றொரு கதை, ரசிக்கும் படியாக உள்ளது.

பிராசி தெஹ்லான் மற்றும் இனியா இவ்விருவரும் ஆடும் ஆட்டம் தான் இந்த பகுதி கதைக்குக் களம்.

மாமாங்க திருவிழாவிற்கு உன்னி முகுந்தனும் மாஸ்டர் அச்சுதனும் சென்றார்களா.  இதற்கு முன் நடந்த மாமாங்கத்தில் ஆட்சியாளர்களை வீழ்த்துவதைத் தவறவிட்ட மம்முட்டி இவர்களுடன் இனைந்து சென்றாரா.

அப்படி சென்றவர்கள் அரச படையின் முன் சண்டையிட்டு வெற்றிபெற்றார்களா  என்பது மீதி கதை.

படத்தில் பல்வேறு லைட்டிங்கில் ஒளிப்பதிவு பேசும்படி உள்ளது.

ஔிப்பதிவு, பின்னணி இசை, செட்,  மாஸ்டர் அச்சுதனின் நடிப்பு இவையே படத்தின் பலம்.

மெகா ஸ்டார் மம்முட்டியின் நடிப்பிற்கு தீனி போட்டதா இந்த படம்  என்றால், இல்லையென்றே சொல்லவேண்டும்.

சிறுவனின் வாள் சண்டையை ரசித்துக்கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு, திடீர் என்று வரும் உன்னி முகுந்தனும் அவரது நண்பரும் அங்கு குண்டு போட, அந்த இடமே தீப்பற்றி எரிந்து கொலைக்களமாகிறது.

இவர்கள் இருவரும் என்ன சாதித்தார்கள் என்று ரசிகர்கள் குழம்பிப்போய் உட்கார்ந்திருக்க. பழம் பெருமை பேசி கொலைக் களம் காண்பது அறிவற்ற செயல், என்று  மம்முட்டி அறிவுரைக்கப் படம் முடிகிறது.

 

மொத்தத்தில்  மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டாலும் வாய்ப்பை நழுவவிட்ட படமாகவே தோன்றுகிறது.