சென்னை:
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெறுவதாகவும், தேர்தல் முடிவுகளை அறிவிக்க தாமதம் செய்வதாகவும் மாநில தேர்தல் ஆணையதை சந்தித்து புகார் கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், இதுகுறித்து நீதிமன்றத்தை நாடப்போவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் முறைகேடு நடைபெறுவதாக கூறி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை, அதிகாரிகள் திட்டமிட்டு சதி செய்கிறது. சுமார் 80 சதவிதிம் இடங்களில் திமுக வெற்றி பெறும் சூழல் உள்ளது. ஆனால், தேர்தல் அதிகாரிகள் திமுக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட வேண்டிய முடிவுகளை அறிவிக்காமல் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள அ.தி.மு.க முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்கா விட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் உண்ணாவிரதம் இருப்பதா அல்லது தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதா என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.
தேர்தல் முறைகேடு தொடர்பாக மாவட்ட அளவில் புகார் அளித்து பயன் இல்லை என்பதால் மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம் என்று கூறியவர், வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, திமுக சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்ற இடங்களில் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் என புகார் அளிக்கப்பட்டு உள்ளது. முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் உடனே உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த முறையீட்டு மனுவை அவசர வழக்காக இன்று விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.