டில்லி

லோக்பால் தேர்வுக் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன் கார்கே  மறுத்துள்ளார்.

லோக்பால் தேர்வுக் கமிட்டியின் மூலம் லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.   அந்த குழு மூலம் பிரதமர்,  பாராளுமன்ற சபாநாயகர்,  மக்களவையில்  ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் உட்பட அனைவரது ஊழல்களையும் கண்காணிக்க முடியும்.   அதற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்பட்டிருந்தார்.

இன்று நடைபெறும் அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள மல்லிகார்ஜுன கார்கே மறுத்துள்ளார்.  அவர், ”இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக என்னை அழைக்கவில்லை.   ஒரு சம்பிரதாயத்துக்காக மட்டுமே அழைப்பு அளிக்கப்பட்டுள்ளது.    அப்படி இருக்க எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க உரிமை இல்லாத நிலையில் இந்தக் கூட்டத்தில் நான் கலந்துக் கொள்வது தேவையற்ற ஒன்று”  எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி கடந்த 2014 நடந்த பாராளுமன்ற தேர்தலில் மிகவும் குறைவான இடங்களே வென்றுள்ளது.   அதனால் லோக்பால் கமிட்டியில் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சி எனக் குறிப்பிடப் படாமல் ஆளும் கட்சிக்கு அடுத்த படியாக அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என குறிப்பிடப் பட்டுள்ளது.  அதையே மல்லிகார்ஜுன கார்கே சுட்டிக் காட்டி தாங்கள் எதிர்க் கட்சி இல்லை என கருதப்படுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.