காஞ்சிபுரம்: மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி அன்று புதிய கட்சி தொடங்கினார். கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சத்யா, கட்சியின் பெயரை வரும் 20ந்தேதி வெளியிடப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
7 நட்சத்திரங்களுடன் அமைந்துள்ள கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய மல்லை சத்யா, என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன் என கூறினார்.

மதிமுகவில் 30ஆண்டுகளுக்கும் மேலாக, வைகோவுக்கு பக்கபலமாக இருந்த வந்தவர் மல்லை சத்யா. திமுகவில் இருந்த வைகோ பிரிந்து வந்தது முதல் கடந்த மாதம் வரை வைகோவுக்கு பாதுகாப்பு உள்பட அனைத்து வகையிலும் தோளோடு தோள் கொடுத்து வந்தவர். ஆனால், வைகோ தனது மகனை கட்சிக்குள் கொண்டு வந்து, அவருக்கு கட்சியின் பதவி, எம்.பி. பதவி என வாரி வழங்கி அழகு பார்க்க தொடங்கியது முதல் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் வைகோவுக்கும் இடையே நெருடல் தொடங்கியது. இதை வைகோ மகன் துரை வையாபுரி சரியான பயன்படுத்தி மல்லை சத்யாவை கட்சியில் இருந்து ஓரம்கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.
இந்த நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
தனனை, துரோகி என்று கூறிய வைகோவுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, கட்சி கட்டுப்பாட்டை மீறி தலைமைக்கு எதிராக செயல்படுவதாக ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
இதனால் வைகோமீது கடும் அதிருப்தியில் இருந்த சத்யா,உ என்மீது சுமத்தியிருக்கின்ற குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டு. எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ன்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன்.
32 ஆண்டுகளில் ஒருநாளும் என் காரில் கொடி இல்லாமல் பயணம் செய்ததில்லை. ஆனால் பழி சொன்ன நாளிலேயே அகற்றிவிட்டேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.. அல்ல அல்ல.. ‘மகன் திமுக’வில் இருந்து நாங்கள் விடுதலை பெற்றிருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். இனிமேல் நாங்கள் சுதந்திர மனிதனாக செயல்பட முடியும் என்றார்.
இந்த நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான நேற்று காஞ்சிபுரத்தில் வைத்து மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சியை துவங்கி உள்ளார்.
அவரது கட்சி கொடியில், கருப்பு-சிவப்பு நிறங்களில், 7 நட்சத்திரங்கள் காணப்படுகிறது. இந்த கொடியை தனது கட்சியின் கொடி என மல்லை சத்யா அறிமுகப்படுத்தினார். தனது கட்சியின் பெயரை நவம்பர் 20 ஆம் தேதி அறிவிப்பதாக மல்லை சத்யா தெரிவித்தார்.
கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மதிமுகவில் இருந்து விலகிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் புலவர் சே.செவிந்தியப்பன், மல்லை சத்யா, செங்குட்டுவன், அழகு சுந்தரம், வல்லம் பசீர், சேலம் ஆனந்தராஜ், இளவழகன் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.