சென்னை: மதிமுகவில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்  மல்லை சத்யா தற்காலிக நீக்கப்பட்டுள்ளார்.  இதற்கான அறிவிப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். இது மதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதிமுக பொதுச்செயலளராக இருந்து வந்த வைகோ, தனது மகன் துரைவைகோவை திடீரென கட்சிக்குள் கொண்டு வந்ததும், அவருக்கு எம்.பி. சீட் பெற்றுக்கொடுத்ததும் மதிமுக மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சில மூத்த தலைவர்கள் மதிமுகவில் இருந்து ஒதுங்கிய நிலையில், மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லை சத்யா மட்டும் கட்சியில் தொடர்ந்து வந்தார். ஆனால், கட்சியை வைகோவின் மகன்  துரை வைக்கோ முழுமையாக கைப்பற்றிய நிலையில், சத்யா கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இது கடந்த பொதுக்குழுவில்,  ம.தி.மு.க முதன்மைச் செயலாளராக செயல்பட்டு வந்த, துரை வைகோவை, கட்சி தலைவரான வைகோ,  மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக நியமித்தார். இதனால் முட்டல் மோதல் அதிகமானது.

இதற்கிடையில், “மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளரான மல்லை சத்யா, துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்ட காலத்தில் இருந்தே கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என பழி சுமத்தமானது. இதனால், இரு தரப்புக்கும் இடையேயான மோதல் வெட்ட வெளிச்சமானது. மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், மல்லை சத்யா அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போல், மல்லை சத்யா தனது துரோகம் செய்துவிட்டதாக வைகோ அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, தன்னை துரோகி எனக் கூறியதற்கு பதிலாக விஷம் கொடுத்திருந்தால் குடித்துவிட்டு இறந்திருப்பேன் என கண்ணீர் மல்க கூறினார்.

இதைத்தொடர்ந்து,  இரு தரப்பும் அறிக்கைகளை வெளியிட்டு தங்களது கட்சியின் அவலங்களை அம்பலடுத்தினர். இதனால் மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். மேலும் கட்சி தலைமை தன்னை கட்சியில் இருந்து நீக்க வில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில்,   மதிமுக துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக அந்த கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்.  கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக மல்லை சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள வைகோ,   கட்சியின் துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாகவும், 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தன்னிடம் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.