டில்லி

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் லெஃப்டினெண்ட் கர்னல் புரோகித்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் மாலேகான் உள்ளது.  கடந்த 2008 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி, இங்குள்ள ஓட்டல் அருகில் மோட்டார் பைக்கில் வைக்கப்பட்ட குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.  முதலில் இது இஸ்லாமிய தீவிரவாதிகளின் சதி என சந்தேகத்துக்குள்ளானது.   விசாரணைக்குப் பின் அபினவ் பாரத் என்னும் இந்துக் குழுவின் மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  இதில் கைது செய்யப்பட்டவர்களில் லெஃப்டினெண்ட் கர்னல் புரோகித்தும் ஒருவர்.

இந்த வழக்கில் பிரக்ஞா தாகூர், புரோகித் மற்றும் சாமி தயானந்த் பாண்டே ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.  தயானந்த் பாண்டே புரோகித் மூலமாக வெடிகுண்டு ஏற்பாடு செய்து அதை தாகூரின் மோட்டார் பைக்கில் வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  இதில் புரோகித் சார்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், புரோகித் 2008ல் இருந்து சிறை வாசம் அனுபவித்து வருகிறார் என்றும். இதுவரை அவர் மேல் குற்றம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றும் எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி மனு செய்யப்பட்டது.  அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்ததால் உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.

மேலும் மகாராஷ்டிரா அரசில் இது குறித்து புரோகித் மீது தொடரப்பட்ட இன்னொரு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் அவருக்கு ஜாமீன் கொடுக்கலாம் என வாதிடப்பட்டது.  இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேசிய புலனாய்வுக் குழுவுக்கும் மகாராஷ்டிரா அரசுக்கும் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

அவர்கள் அளித்த பதிலின் பேரில் இன்று புரோகித்துக்கு உச்ச நீதி மன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.