நியூஆர்லியன்ஸ்: ஆண்களுக்காக ஆய்வுசெய்து தயாரிக்கப்பட்ட புதிய கருத்தடை மாத்திரை, பலவகையான பரிசோதனைகளில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த மாத்திரையை, ஒரு ஆரோக்கியமான ஆண், நாளுக்கு ஒன்று என்ற அளவில், ஒரு மாதம் உட்கொண்டு வந்தால், ஹார்மோன் செயல்பாடுகள் உற்பத்தி செய்யப்படுவதுடன், கரு உருவாக்கும் திறனும் தடுக்கப்படுகிறது.
இம்மாத்திரை தொடர்பான முதற்கட்ட ஆய்வு முடிவுகள், நியூஆர்லியன்சில் நடந்த ஒரு வருடாந்திர கூட்டத்தில், மார்ச் 24ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டன.
வாஷிங்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டீஃபன் பேஜ் மற்றும் லாஸ்ஏஞ்சலிஸ் நகரிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டினா வாங் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த ஆய்வை நடத்தினார்கள்.
இந்த மாத்திரையானது, 11-beta-methyl-19-nortestosterone dodecylcarbonate அல்லது 11-beta-MNTDC என்று அழைக்கப்படுகிறது. இரண்டு நகரங்களில், மொத்தம் 40 ஆரோக்கியமான ஆண்களிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் கலந்துகொண்டவர்கள், ஒரு நாளைக்கு 1 மாத்திரை என மொத்தம் 28 நாட்கள் எடுத்துக் கொண்டனர். விந்து உற்பத்திக்கு தேவையான இரண்டு ஹார்மோன்களின் நிலைகள், பெரியளவில் வீழ்ச்சியடைந்தது இதன்மூலம் தெரியவந்துள்ளது.
அதேசமயம், இந்த மாத்திரையை உட்கொள்வதால், ஒருவரின் ஆண்மை எந்தளவிலும் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி