மும்பை
மலேசியா இரு மாதங்களில்1 லட்சம் டன் அரிசியை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப் பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தி நாடாக விளங்கும் மலேசியாவுக்கு மியான்மர், வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெருமளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா வரஸ் காரணமாக இந்நாடுகள் தங்களுக்குத் தேவையான உணவு தானியங்களைச் சேமித்து வருகின்றன. அதையொட்டி அரசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே மலேசியா உலகின் மிகப் பெரிய அரிசி ஏற்றுமதி நாடான இந்தியாவிடம் இருந்து இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் ஆகிய இரு மாதங்களில் 1 லட்சம் டன அரிசி இறக்குமதி செய்ய உள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஐந்தாண்டுகளாக இந்தியாவில் இருந்து மலேசியா இறக்குமதி செய்யும் அண்டு அளவில் இரு மடங்காகும். இந்த ஆண்டு இறுதியில் இது 2 லட்சம் டன்னாக உயரலாம் எனக் கூறப்படுகிறது.
காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவுக்கு எதிராக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கருத்து தெரிவித்திருந்தார். அதையொட்டி மலேசியாவில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து மலேசியா அரிசி இறக்குமதி செய்வதன் மூலம் மீண்டும் இரு நாடுகள் இடையே வர்த்தக உறவு மேம்படும் எனக் கூறப்படுகிறது.