கோலாலம்பூர்

ந்தியாவில் பயங்கரவாதத்தை பரப்பிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்தி இந்தியா அனுப்ப மாட்டோம் என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்னும் ஒரு அமைப்பு மும்பையில் இயங்கி வந்தது. இதன் நிறுவனர் ஜாகிர் நாயக் இஸ்லாமிய மத போதகர் ஆவார். இவருடைய உரைகளில் பிற மதத்தினருக்கு எதிராக இஸ்லாமிய இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை இவர் தெரிவித்து வந்துள்ளார். இதற்காக இவருக்கு வெளிநாட்டில் இருந்து நிதி உதவி ஏராளமாக வந்ததாக கூறப்படுகிறது.

இவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க முற்பட்டது. அதை அறிந்த ஜாகிர் நாயக் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டை விட்டு வெளியேறி மலேசியாவுக்கு சென்றார். அங்கு அவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அவர் மீது பயங்கரவாதத்தை தூண்டியது கருப்புப் பண மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.  இந்தியாவில் உள்ள இவருடைய சொத்துக்கள்  முடக்கப்பட்டுள்ளன.

ஜாகிர் நாயக்கை இந்தியா கொண்டு வந்து விசாரிப்பதற்காக அவரை இந்தியாவுக்கு அனுப்புமாறு மலேசிய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கைக்கு பதில் அளித்துள்ள மலேசிய பிரதமர் இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தார். அதன் பிறகு இந்திய சிறப்பு நீதிமன்றம் ஜாகிர் நாயக் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவின் அடிப்படையில் மலேசிய அரசு ஜாகிர் நாயக் நாடு கடத்தப்பட்டு இந்தியா அனுப்பபட வேண்டும் என மலேசிய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் தருக் சைஃபுடின் அப்துல்லா, “எங்களுக்கு இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என இந்திய அரசு விடுத்த கோரிக்கை வந்து சேர்ந்தது. ஏற்கனவே மலேசிய பிரதமர் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார். நாங்கள்  எங்கள் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டோம். ஜாகிர் நாயக் நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட மாட்டார்” என தெரிவித்துள்ளார்