மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிப்பதாகவும், படுக்கையை பகிர்ந்துகொண்டால் தான் படவாய்ப்புகள் கிடைப்பதாகவும் நடிகைகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

2017ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகர் திலீப் தூண்டுதலின் பேரிலேயே இந்த பலாத்கார சம்பவம் அரங்கேறியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இருந்தபோதும் மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் மற்றும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன தவிர பெண்களுக்கு சம் ஊதியம் மறுக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகைகள் ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட சில நடிகைகள் சேர்ந்து தொடங்கிய பெண்கள் நல அமைப்பு இந்த புகார்கள் தொடர்பாக மாநில அரசு விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்திவந்தனர்.

திரைத்துறையில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான இந்த புகார்களை விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை 2019ம் ஆண்டு கேரள அரசு நியமித்தது.

ஹேமா கமிட்டி நடத்திய விசாரணையில் பெறப்பட்ட தகவல்களை அறிக்கையாக அரசிடம் ஏற்கனவே சமர்ப்பித்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது.

இதை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரப்பட்ட நிலையில் தற்போது இதில் உள்ள சர்ச்சைக்குரிய சில தகவல்களை நீக்கிவிட்டு வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து இன்று வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையில் மலையாள திரைத்துறை 15 பிரபலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் திரைத்துறையில் உள்ள பெண்கள் மற்றும் நடிகைகள் பாதுகாப்பற்ற சூழலில் பயத்துடனேயே பணி புரிந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் கேஸ்டிங் கவுச் (Casting Couch) எனும் பாலியல் அத்துமீறல் கலாச்சாரம் மலையாள திரையுலகில் ஆழமாக வேரூன்றி உள்ளதாக தெரிவித்துள்ளது.

மலையாள திரையுலகின் நிஜ முகத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ள ஹேமா கமிட்டியின் இந்த அறிக்கை இதுவரை முழுமையாக வெளியாக வில்லை என்றபோதும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களால் கேரளாவில் மட்டுமன்றி இந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.