மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் அனில் நெடுமங்காடு அணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சூப்பர் ஹிட் படமான அய்யப்பனும் கோஷியும் படத்தில் சதீஷ்குமார் என்ற போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார்.
இப்போது பீஸ் என்ற படத்தில் நடித்து வந்தார். இதன் ஷூட்டிங் தொடுபுழாவில் நடந்து வருகிறது. இதற்காக அங்கு சென்ற அனில், அங்குள்ள மலங்காரா அணையில் நண்பர்களுடன் நேற்று மாலை குளிக்கச் சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென நீரில் மூழ்கினார்.
அவரைக் காணாததால், அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை தேடினர். சிறிது நேரத்தில் அவர் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.