சென்னை: தமிழ்நாடு அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பெற்று வரும் நிலையில், 50வது லட்சம் பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். இதற்கான விழா சித்தலப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக, கடந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை சார்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்மூலம், நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும பயனாளிகளின் இல்லங்களுக்கு மருத்துவ குழுவினர் சென்று மருத்துவ சேவைகள் வழங்கி வருகின்றனர். குறிப்பாக, 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குதல் , நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை செய்வதில் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த சேவை திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் இதுவரை பல லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். அதன்படி இன்று 50வது லட்சம் பயனாகிளுக்கு மருந்து பெட்டகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் அருகே உள்ள சித்தலபாக்கம் ஊராட்சியில் இன்று நடைபெறுகிறது.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சத்து ஒன்றாவது பயணிகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை வழங்குகிறார். அத்துடன் 108 அவசரகால ஊர்திகளின் சேவைகளையும் இன்று தொடங்கி வைக்கிறார் .
அதைத் தொடர்ந்துரு, இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் பயனடைந்த 20 ஆயிரம் பயனாளிகளின் சார்பாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியிலும் முதல்வர் முக ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார். முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.