சென்னை: மக்கள் நல பணியாளர் விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழகஅரசின் புதிய முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், மக்கள் நல பணியாளர்களுக்கு பணி வழங்கும் தமிழகஅரசின் புதிய முடிவுக்கு தடை இல்லை என்றும் கூறியுள்ளது.
கடந்த 1989-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில், வேலையில்லாமல் இருந்த 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும், மக்கள் நலப் பணியாளர்களாக 2-7-1990 அன்று நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் 1991ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, இந்த 13,000 மக்கள் நலப் பணியாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பிறகு 1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது, அந்த 13,000 மக்கள் நலப் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர் 2001ஆம் ஆண்டு, மீண்டும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த போது, மறுபடியும் மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது அரசியலாக்கப்பட்டு வந்தது. பின்னர் நடைபெற்ற வழக்கின்போது சென்னை உயர்நீதிமன்றம் மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தொடர்ந்த மேல்முறையீட்ட வழக்கில்,. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையில் கொரோனா பேரிடர் காலத்தில் தங்களுக்கும் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மக்கள் நலப்பணி யாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கும், இந்த வழக்கின் மூல வழக்கு மற்றும் பிற வழக்கு களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி வந்ததும், அரச சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில், “பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அத்துடன், mgnrega திட்டத்தின் கீழ் மாதம் ரூ7500 ஊதியத்துடன் பணி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு தகவல்களையும் தெரிவித்தது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் சார்பிலான இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து வந்த நீதிமன்றம், தமிழகஅரசின் பதிலை ஏற்று, வழக்கை முடித்து வைத்தது .
வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்தும் தமிழக அரசின் முன்மொழிவு கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியதுடன், அமல்படுத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், புதிய முடிவிற்கு உடன்படும்படி யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளதுடன், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று அறிவித்துள்ளதுடன், பிரச்சினை என்றால் நீதிமன்றத்தை நாடலாம் என்று அறிவுறுத்தியதுடன், மக்கள் நல பணியாளர்களுக்கு பணி வழங்கும் தமிழகஅரசின் புதிய முடிவுக்கு தடை இல்லை என்றும் கூறியுள்ளது.