புதுடெல்லி: குறைந்த ஓவர் கிரிக்கெட்டிற்கு, ரோகித் ஷர்மாவை இந்திய அணி கேப்டனாக நியமிக்கவில்லை என்றால், நஷ்டம் இந்திய அணிக்குத்தான் என்று காட்டமாக கூறியுள்ளார் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர்.
அரசியலில் குதித்து, மக்களவை உறுப்பினர் ஆகிவிட்டாலும்கூட, கிரிக்கெட் பற்றி தவறாது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் கம்பீர்.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் பற்றி கருத்து கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை ஒரு கேப்டனாக வென்று கொடுத்துள்ளார் ரோகித் ஷர்மா.
எனவே, குறைந்த ஓவர் கிரிக்கெட்டுகளான டி-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு, ரோகித்தை இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும். டெஸ்ட் கேப்டனாக விராத் கோலி தொடரலாம். கேப்டன்சியை பிரித்துக் கொடுப்பதால் எதுவும் கெட்டு விடாது.
இந்திய அணிக்கு தோனி எப்படி சிறந்த கேப்டனோ, அப்படித்தான் ரோகித்தும். எனவே, குறைந்த ஓவர் போட்டிகளுக்கு அவரை கேப்டனாக்குவதே இந்திய அணிக்கு நல்லது. அப்படி நடைபெறவில்லை என்றால், நஷ்டம் அணிக்குத்தானே தவிர, அவருக்கில்லை.
யாரை கேப்டனாக்க வேண்டுமென்பதற்கான அளவுகோல்கள் அனைவருக்கும் ஒரேமாதிரியானதாக இருக்க வேண்டும்” என்றார்.