மதுரை: காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தந்தை – மகன், ஜெயராஜ் மற்றும் பெனிஸ் ஆகிய இருவர் தொடர்பான வழக்கில், கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் சில முக்கிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அவர்கள் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது ஜூன் 19ம் தேதி இரவு 10 மணி. அதனையடுத்து, நீதிபதியின் முன்பாக, ஜூன் 20ம் தேதி அதிகாலை 2 மணிக்கு ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
ஆனால், அவர்கள் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்படுவதோ, ஜூன் 20ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு. எனவே, அந்த இடைப்பட்ட 12 மணிநேரத்தில் அவர்கள் இருவரும் காவல்துறையினரால் எங்கு கொண்டு செல்லப்பட்டனர்? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் என்பவர்தான், முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்தவர். அதில், இரவு 9.15 மணிக்கு குற்றம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதியின் முன்பாக ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்படுவதற்கு முன், தந்தையும் மகனும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அப்போது, அவர்களுக்கு காயங்கள் இருந்திருந்தால், மருத்துவர்கள் அதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படியான பட்சத்தில், அதுதொடர்பாக நீதிபதி என்ன முடிவெடுத்தார்? அவர் எப்படி காயங்களை கவனிக்கத் தவறினார்?
மருத்துவர் மட்டுமல்ல, சிறை அதிகாரிகளும்கூட, தந்தையும் மகனும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் குறிப்பிடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த மர்மங்கள் எப்போது அவிழும் என்ற கொந்தளிப்பு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
முதல் தகவல் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது: