கொழும்பு: இலங்கையில் மகிந்த ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்தது. மேலும், நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பொறுப்பேற்ற நிதியமைச்சர் அலி சப்ரி இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டு அரசை எதிர்த்து, பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு அரசியல் களம் சூடுபிடித்தள்ளது.
இன்று இலங்கை பாராளுமன்றம் கூடிய நிலையில், ஆளும் ராஜபக்சே தலைமையிலான அரசு மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு இருப்பதுடன், பல அமைச்சர்களும், தங்களது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில், பல அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதனால், ஆளும் எஸ்.எல்.பி.பி. கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. 225 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 113 பேர் ஆதரவு தேவைப்படும் நிலையில் 103 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. நாடாளுமன்றத்தில் அரசுக்கான ஆதரவை 43 உறுப்பினர் கள் திரும்ப பெற்றதால் மகிந்தா ராஜபக்ச அரசு கவிழ்ந்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை சுதந்திர கட்சி உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றன.
இந்த நிலையில் இலங்கை நிதியமைச்சராக நேற்று பொறுப்பேற்ற அலி சப்ரி பதவி விலகினார். பசில் ராஜபக்ச பதவி பறிக்கப்பட்டு அலி சப்ரிக்கு நிதியமைச்சர் பதவி நேற்று வழங்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் திடீர் பதவி விலகினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.