பனாஜி:
பிரதமர் மோடி, பா.ஜ. தலைவர் அமித்ஷாவுக்கு வளையல் அனுப்ப கோவா மாநில மகளிர் காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.
கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தை பார்வையிட சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கார் மீது கல்வீசப்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.வை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், கோவா மாநில காங்கிரஸ் மகளிர் அணியினர் பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷாவுக்கு வளையல் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இது குறித்து மாநில மகளிர் அணி நிர்வாகி பிரதிமா சோடின்ஹோ கூறுகையில், ‘‘ நிர்வாகிகள் வீடுகளில் சேகரித்த வளையல்களை பிரதமர் மோடிக்கும், பா.ஜ. தலைவர் அமித்ஷாவுக்கும், கல்லை எறிந்த நபருக்கும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்.
வெள்ளத்தினால் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றவர் மீது கல்வீசப்பட்டது கோழைத்தனமானது. இந்தியா ஜனநாயக நாடு. யாரும் எங்கும், பயமில்லாமல் சென்று வரலாம். ராகுல் குடும்பத்தினர் நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் என்பதை பா.ஜ. நினைவில் வைத்து கொள்ள வேண்டும்’’ என்றார்.