சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை ஊக்கமூட்ட நடைபெற்ற பேச்சு தமிழகம் முழுவதும் இன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க பரம்பொருள் பவுண்டேசன் என்ற அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்ற நபர் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டார்.
பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு பேராசிரியர்கள், துறை சார் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்கள் என சமூகத்தில் முன்மாதிரியாக விளங்கக்கூடியவர்களை அழைத்து மாணவர்கள் முன் பேச வைப்பது வழக்கம்.
இருந்தபோதும், சமீப ஆண்டுகளாக, திரைத்துறை, சமூக வலைதள பிரபலங்கள், யூடியூபர்கள், டிக் டாக் பிரபலங்கள் என பலரும் பள்ளி முதல் உயர்கல்வி நிலையங்கள் வரை கலைநிகழ்ச்சிகள் நடத்துவது மட்டுமன்றி மோட்டிவேஷனல் ஸ்பீச் என்ற பெயரில் மாணவ சமுதாயத்துக்கு பொருந்தாத கருத்துக்களை கூறுவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் கலந்து கொண்டு பேசிய மகாவிஷ்ணு என்ற நபர் தனது இந்த பேச்சை அவரது யூடியூப் சேனலில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் பதிவிட்டு அனைவரையும் அசத்தப்பார்த்தார்.
அதில், மெய்யியல் சார்ந்த தன்னை அறிதல் வகுப்பு என்ற பெயரில் மாணவிகளிடையே முன்ஜென்மம், பாவ புண்ணியம் போன்ற புராண இதிகாச கட்டுக்கதைகளை மட்டுமன்றி மாற்றுத்திறன் படைத்தவர்களாகப் பிறப்பது அவர்கள் முற்பிறப்பில் செய்த பாவம் தான் காரணம் என்று பேசினார்.
அவரது இந்த பேச்சுக்கு அதே பள்ளியைச் சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியரான சங்கர் நிகழ்விடத்திலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மேடையில் பேசிக்கொண்டிருந்த மகாவிஷ்ணு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டைக்கு இறங்கினார்.
இந்த வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு சர்ச்சையானதை அடுத்து கல்வி நிலையத்தில் பிற்போக்குத்தனமான மற்றும் ஆன்மீக பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்தது.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சம்பந்தப்பட்ட அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் துறை ரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மகாவிஷ்ணு மீது மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டப்படி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மகாவிஷ்ணுவிடம் விசாரணை மேற்கொள்ள திருப்பூரில் உள்ள அவரது அறக்கட்டளை அலுவலகத்துக்கு காவல்துறை அதிகாரிகள் சென்றனர்.
ஆனால், மாற்றுத் திறனாளிகளின் மனம் புண்படும் விதமாகப் பேசியதோடு மட்டுமல்லாமல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்தும் கேள்வி எழுப்பிய மகாவிஷ்ணு சென்னை மற்றும் திருப்பூரில் இல்லாத நிலையில் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் அவர் தலைமறைவானதாக தெரியவந்துள்ளது.