இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் இணைந்தார். இது வரலாற்று நிகழ்வு என்று காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் 72 வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள பலாப்பூரில் துவங்கிய இன்றைய யாத்திரை வரலாற்று சிறப்பு மிக்க யாத்திரையாக மாறியது.

இன்றைய யாத்திரை ஷேகான் என்ற இடத்தை அடைந்தபோது அங்கு மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும் எழுத்தாளருமான துஷார் காந்தி யாத்திரையில் கலந்து கொண்டார்.

வரலாற்று நினைவாக இதனை குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி வெள்ளையர்களுக்கு எதிராக காந்தி – நேரு இருவரும் ஒன்றாக மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்து.

காந்தி மற்றும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த நான்காவது தலைமுறை தற்போது இந்திய ஒற்றுமைக்காக மீண்டும் இணைந்திருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்தப் பயணம் 20ம் தேதி மத்திய பிரதேசத்துக்குள் நுழைய இருக்கிறது.

இதனை அடுத்து ராஜஸ்தான், உத்தர பிரதேசம், டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக செல்ல இருக்கும் இந்த பாதயாத்திரைக்கு விவசாய சங்கங்களின் ஆதரவு பெருகிவருவது குறிப்பிடத்தக்கது.