ஜோகன்ஸ்பெர்க்: தென்ஆப்பிரிக்காவில் வசித்து வரும், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி பணமோசடி செய்தது தொடர்பான வழக்கில், 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
இந்தியாவின் தேசப்பிதா என அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 2வது மகனான மணிலால் காந்தியின் மகளான இலா காந்தியின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின் (வயது 56). தென் ஆப்பிரிக்காவில் பிறந்து அங்கேயே வசித்து வருகிறார். இவர் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
ஆஷிஷ் லதா ராம்கோபின், சணல் இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றில், போலியான சணல் இறக்குமதி ஆர்டரை காட்டி, 6.2 மில்லியன் ராண்ட் (தென் ஆப்பிரிக்க பணத்தின் பெயர்) இதற்காக நிதி கடனாக வேண்டும் எனவும் தங்களுடன் லாப பகிர்வு செய்து கொள்வதாகவும் கூறி வாங்கியிருக்கிறார். ஆனால், அவர் கூறியபடி பணத்தை திரும்பி செலுத்தவில்லை. இதுகுறித்த புகாரில், காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதில், ஆஷிஷ் லதா ராம்கோபின் காட்டிய அனைத்து ஆவணங்களும் போலியானது என தெரிய வந்தது.
இது தொடர்பான வழக்கு டர்பன் நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தீர்ப்பில், ஆஷிஷ் லதா ராம்கோபின் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
காந்தியின் கொள்ளுப்பேத்தி பண மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்றது, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்தியின் பேத்தியும், ஆஷிஷ் லதா ராம்கோபினுடைய தாயாருமான இலா காந்தி, பல்வேறு சமூக செயல்களுக்கான அமைதி விருதை பெற்றிருக்கிறார். மேலும் 1994 முதல் 2004 வரை தென் ஆப்பிரிக்க பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.