கோவை
மகாராஷ்டிர ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் கமலஹாசன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நேற்று கோவை விமானநிலையத்தில் மகாராஷ்டிர அளுநர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்க:ளிடம்,
“பெங்களூருவில் நடைபெற்ற துயர சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. விளையாட்டை விளையாட்டாக தான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார். காலம் கடந்து அவர்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய வெற்றியை கொண்டாடுகின்ற போது கட்டுப்பாடு இல்லாமல் போனதன் விளைவாகத்தான் பத்து உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம். அனைத்து இடத்திலும் பொறுமை காப்பது அவசியம் என்பதை இந்த துயர நிகழ்வு நமக்கு உணர்த்தி உள்ளது.
அரசு ஒரு துயர சம்பவம் நடந்த பிறகு எதிர்காலத்தில் இது போன்று ஒரு துயரம் நடக்காமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து தான் ஆக வேண்டும். மேலும் அணி நிர்வாகம் தான் பாதுகாப்பு குறித்து கேட்டிருக்க வேண்டும். கமல்ஹாசன் பொது வாழ்க்கையில் இருக்கின்றவர், அரசியலுக்கு மட்டும் ஒரு பகுதி பொது வாழ்க்கை அல்ல, திரைப்படங்களில் நடிக்கும்போது கூட பொதுமனிதராகத்தான் இருக்கிறார். பேசுகின்ற போது கவனத்துடன் பேச வேண்டும். சமஸ்கிருத மொழியில் இருந்து தான் தமிழ் மொழி வந்தது என்று கூறினால் தமிழகம் கொந்தளிக்காதா?
தேவையற்றதை பேசுவதை பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்துகின்ற உரிமை பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு கிடையாது என தெரிவித்தார். கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கனவே காவிரி நீர் பிரச்சனை இரண்டு மாநிலங்களுக்கு இடையே இருந்து வரும் நிலையில் தேவையற்ற கொந்தளிப்புகள் இருப்பதாகவும் அந்த கொந்தளிப்பு தணிந்திருக்க கூடிய நேரத்தில் இன்னொரு கொந்தளிப்பை இது உருவாக்கி இருக்கிறது, இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் ”
என்று தெரிவித்தார்.