மும்பை

கொரோனா தொற்று அதிகரிப்பால் விரைவில் முழு ஊரடங்குக்கு மகாராஷ்டிரா மாநிலம் தயாராகி வருவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி  உள்ளார்

அகில உலக அளவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் இந்தியாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.    இதில் மகாராஷ்டிர மாநிலம் கொரோனா  பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது.  இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 லட்சத்தைத் தாண்டி அதில் 54000க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளார்.

இதையொட்டி மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப், முதன்மை செயலர் சீதாராம் குண்டே, மற்றும் மருத்துவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி உள்ளார்.  தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மேலும் மேலும் அதிகரிப்பது குறித்து அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவ படுக்கைகள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.  இதையொட்டி இவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  மாநிலம் முழுவதும் தற்போது 3.75 லட்சம் தனிமை படுக்கைகள் உள்ளன.  இதில் 1.07 லட்சம் படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர்.

மக்கள் சரிவர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவில்லை என்பதால் கொரோனா அதிகரிப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.  எனவே இதைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் இதற்காக மகாராஷ்டிர மாநிலம் தயாராகி வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.